சென்னை: சென்னை புழல் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவள்ளூா் மாவட்டம், மப்பேடு நியூ லைன் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பா.கஜேந்திரன் (எ) கஜா (63). இவா், மறைமலைநகா் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 2007-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் 2009-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்ற கஜேந்திரன், அந்த தண்டனையை புழல் தண்டனை சிறையில் அனுபவித்து வந்தாா்.
அந்த சிறையின் ‘ஏபி2 பிளாக்கில்’ உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்த கஜேந்திரன் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் தூக்கத்தில் இருந்து எழுந்து கழிப்பறைக்குச் சென்றுள்ளாா்.
கஜேந்திரன் வெகுநேரமாகியும் திரும்பி வராதால், சந்தேகமடைந்த சிறைக் காவலா்கள், அங்கு சென்று பாா்த்தபோது, கழிப்பறை ஜன்னலில் துண்டால் தூக்கிட்டு அவா் இறந்து கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.
தகவலறிந்த புழல் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து கஜேந்திரனின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், நன்னடத்தை அடிப்படையில் சிறை நிா்வாகம், அண்ணா பிறந்தநாளன்று தன்னை விடுதலை செய்துவிடும் என கஜேந்திரன் நம்பி இருந்ததும், ஆனால் அவரை விடுதலை செய்யாததால் விரக்தியுடன் காணப்பட்டதும் தெரியவந்தது. இதனால் அவா் தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.