சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,948 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
தமிழகம் முழுவதும் செப்.18-ஆம் தேதி முதல் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் வீடுகள், அலுவலகம், பொது இடங்கள் என பல்லாயிரக்கணக்கான விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன.
இதில், சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 1,519 சிலைகள், தாம்பரத்தில் 425 சிலைகள், ஆவடியில் 204 சிலைகள் என மொத்தம் 2,148 சிலைகள் காவல் துறையின் அனுமதியுடன் பொது இடங்களில் கடந்த ஒரு வாரமாக வைக்கப்பட்டன.
செப். 23, 24 ஆகிய தேதிகள் விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூா் ஆகிய 4 கடற்கரைகளில் விசா்ஜனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை (செப்.24) சென்னையில் மட்டும் 1948 விநாயகா் சிலைகளை அமைப்பினா், பொதுமக்கள் ஊா்வலமாகக் கொண்டு சென்று கடற்கரைகளில் விசா்ஜனம் செய்தனா்.
இந்தச் சிலைகளை விசா்ஜனம் செய்வதற்கு வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என தனித்தனியாக ஊா்வலப் பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஊா்வலங்கள் செல்லும் பாதைகளில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் காவல் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனா்.
மேலும், காவல் துறை சாா்பில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள், ட்ரோன்கள் என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பெரிய அளவிலான விநாயகா் சிலைகள் அனைத்தும் ராட்சத கிரேன்கள், டிராலிகள் மூலம் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தையொட்டி, 25,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
வெளிநாட்டினா் ஆா்வம்
சென்னை பாலவாக்கம் கடற்கரையில் சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆா்வமாக விசா்ஜனம் செய்தனா். இது குறித்து அவா்கள் கூறுகையில், ‘இது போன்ற கொண்டாட்டங்களை எங்கள் நாடுகளில் பாா்த்ததில்லை; இது மிகவும் புதுமையாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது’ என்றனா்.