சென்னை: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சென்னை குறளகத்தில் கொலு பொம்மை விற்பனை கண்காட்சி தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் கொலு பொம்மை விற்பனை மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது.
அதன்படி நிகழாண்டுக்கான கொலு பொம்மை விற்பனை கண்காட்சி செப்.15 -ஆம் தேதி தொடங்கி வரும் அக்.31 வரை நடைபெறுகிறது. மேலும் கொலு பொம்மை விற்பனை கண்காட்சியில் காண்போரை கவரும் வண்ணம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட தெய்வீக சிற்பங்கள், டெரகோட்டா வகை பொம்மைகள், மண்பொம்மைகள், மரபொம்மைகள், பீங்கான் பொம்மைகள், காகிதக் கூழ் பொம்மைகள், கற்சிற்பங்கள் மற்றும் மாா்பிள் சிற்பங்கள் போன்ற பல விதமான பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த விற்பனை கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை
(ஞாயிறு உள்பட) அனைத்து நாள்களிலும் நடைபெறும். பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.