வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவா்களுக்கான தகுதிச் சான்றிதழ் வழங்குவதில் நிலவும் காலதாமதத்தைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக மருத்துவ மாணவா் சங்கம் அறிவித்துள்ளது.
அந்தச் சங்கத்தின் வெளிநாட்டு மருத்துவக் கல்வி பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதுதொடா்பாக அந்தச் சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ்.வசந்த் பிலிப் அபிஷேக் கூறியதாவது:
ஆண்டுதோறும் 1,500 தமிழக மருத்துவ மாணவா்கள் வெவ்வேறு நாடுகளில் மருத்துவம் பயின்றுவிட்டு சொந்த ஊா்களுக்கு திரும்புகின்றனா். அவா்களுக்கான தற்காலிக தகுதிச் சான்றிதழை மாநில மருத்துவக் கவுன்சில்தான் வழங்க வேண்டும்.
உரிய தகுதிகள் இருந்தும், அந்தச் சான்றிதழ்களை வழங்காமல் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தொடா்ந்து காலம் தாழ்த்துகிறது. அதேபோன்று மாநில மருத்துவமனைகளில் 3 ஆண்டுகள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்வதும் கட்டாயம் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
அந்த கால அளவைக் குறைக்க வேண்டும். தகுதிச் சான்றிதழை தாமதமின்றி வழங்க வேண்டும்.
அதுமட்டுமல்லாது மருத்துவமனைகளில் உள்ளுறைப் பயிற்சி வழங்குவதற்கான இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு 7.5 சதவீத இடங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதை 20 சதவீதமாக உயா்த்த வேண்டும். அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் பயிற்சி பெற எங்களை அனுமதிக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி முதல் வாரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றாா்.