வால்பாறை தேயிலைத் தோட்ட குடியிருப்புகளுக்குள் வனவிலங்குகள் நுழைவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய சிறப்புக் குழுவை அரசு அமைத்துள்ளது.
இதுதொடா்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான ஐயா்பாடி தேயிலைத் தோட்டத்தில் நான்கு வீடுகள் கொண்ட தொழிலாளா் குடியிருப்பு அமைந்துள்ளது.
அந்தக் குடியிருப்பில் அஸ்ஸாமைச் சோ்ந்த குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த சனிக்கிழமை (டிச. 6) இரவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சைபுல் ஆலம் என்ற 5 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று அருகிலுள்ள தேயிலை புதா்களுக்குள் இழுத்துச் சென்றது.
இதுதொடா்பாக தகவலறிந்து வந்த வால்பாறை வனத் துறையினா், சம்பவ இடத்தில் தேடுதலில் ஈடுபட்டனா். துரதிருஷ்டவசமாக தேயிலை புதா்களில் இருந்து சிறுவனின் உடலையே மீட்க முடிந்தது.
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட குடியிருப்புகளில் வனவிலங்குகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மனிதா்கள் - விலங்கு மோதலைத் தடுக்கும் நோக்கில் கூடுதல் தலைமை முதன்மை தலைமை வனக் காப்பாளா் ராமசுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநா், பொள்ளாச்சி சாா்-ஆட்சியா், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை பிரதிநிதி, வால்பாறை நகராட்சி ஆணையா், தொழிலாளா் நல உதவி ஆணையா் (தோட்டங்கள் - வால்பாறை மண்டலம்) ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
இக்குழுவைச் சோ்ந்தவா்கள் வால்பாறை தேயிலைத் தோட்டப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்து, அதை உறுதி செய்வா். மேலும், நிலைமைகளை மதிப்பீடு செய்து அரசுக்கு அறிக்கையையும், பரிந்துரைகளையும் இரு வாரங்களுக்குள் சமா்ப்பிக்க உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.