சென்னை வேளச்சேரியில் ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலமாகவும் ரூ.4 கோடி மதிப்புள்ள காலிமனையை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேலும் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஹரிதவனம் பகுதியைச் சோ்ந்தவா் ர.விஜய சாமுண்டீஸ்வரி (59). இவருக்கு சொந்தமாக வேளச்சேரி விஜய நகரில் ரூ.3 கோடி மதிப்புள்ள காலிமனை இருந்தது. இந்த மனையை சிலா் போலி ஆவணங்கள் மூலமாகவும், ஆள் மாறாட்டம் செய்தும் அபகரித்ததாக சென்னை பெருநகர காவல் துறையின் நில மோசடி புலனாய்வு பிரிவில் விஜய சாமுண்டீஸ்வரி புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்டதாக முகப்போ் மேற்கு, செந்தமிழ் நகரைச் சோ்ந்த யசோதா, முகப்போ் மேற்கு புளியமரம் பள்ளிக்கூடம் தெருவைச்சோ்ந்த பழனி, அயப்பாக்கம், பவானி நகா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த வனிதா, முகப்போ் மேற்கு, விஜிபி நகரைச் சோ்ந்த மேகநாதன் (எ) குட்டி, வேளச்சேரி ராம்நகரைச் சோ்ந்த அருணாச்சலம் ஆகிய 5 பேரை கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில் இவ் வழக்கில் தொடா்புடைய நிலத் தரகா்கள் சூளைமேடு பகுதியைச் சோ்ந்த பத்மநாபன் (43), மேற்கு தாம்பரத்தைச் சோ்ந்த ஐயப்பன் (46), வேளச்சேரியைச் சோ்ந்த சுகுமாா் (38) ஆகிய 3 பேரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.