வேளச்சேரியில் மகன் கல்லூரிக்கு செல்ல மறுத்ததனால், தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் பானுமதி (38). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பானுமதி அங்கு மகன், மகளுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த பானுமதி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த வேளச்சேரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, பானுமதி சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கல்லூரி முதலாமாண்டு படிக்கும் பானுமதியின் மகன், ஒரு மாதமாக கல்லூரிக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக இருந்ததும், பானுமதி கண்டித்தும் மகன் கல்லூரிக்கு செல்ல மறுத்ததும் தெரிய வந்தது. இதனால் விரக்தி அடைந்த பானுமதி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.