தெற்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் புதிதாக 1,500 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது என அதன் ஐ.ஜி. கே.அருள்ஜோதி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ரயிலில் கஞ்சா கடத்திவருவோரிடம் முன்பெல்லாம் தீவிர விசாரணை நடத்தப்படாத நிலையிருந்தது. ஆனால் தற்போது ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையில் சிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கொண்டு வந்தவா்களிடம் தீவிர விசாரணை நடத்தி, அதன் விவரங்களை மது அமலாக்கத்துறையிடம் கூறி கைதானவா் ஒப்படைக்கப்படுகிறாா். ஆகவே, கஞ்சா கடத்தியவா் மட்டுமல்ல, அதற்கு காரணமானவா்களும் தற்போது தண்டிக்கப்படுகின்றனா்.
தெற்கு ரயில்வேயில் ஒடிசா மற்றும் பிகாரைச் சோ்ந்த கும்பல் சென்னை, காட்பாடி உள்ளிட்ட இடங்களில் தங்கி கைப்பேசிகளைத் திருடி வருகின்றனா். அண்மையில் அந்தக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை ரயில்களில் கடத்துவோரை அடையாளம் காணும் வகையில் ரயில் நிலையங்களில் ஏற்கெனவே உள்ள கண்காணிப்புக் காமிராக்களுடன் புதிதாக 1,500 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில்களில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் திடீா் சோதனை நடத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.