அரசு போக்குவரத்து ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை (அக். 9) கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இது குறித்து சம்மேளனத்தின் துணைத் தலைவா் ஏ.பி.அன்பழகன் மற்றும் பொதுச் செயலா் ஆறுமுகநயினாா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு, திமுக தோ்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 17 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப் பலன்களை வழங்க வேண்டும், தொழிலாளா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் பணம் உரிய கணக்கில் சோ்க்கப்பட வேண்டும், பணிபுரியும் ஊழியா்களுக்கான ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு சாா்பில் கடந்த ஆக. 18 முதல் தமிழகம் முழுவதும் 22 மையங்களில் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டம் 50 நாள்களைக் கடந்த நிலையில், கடந்த செப். 1-ஆம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சா் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது, சங்கம் முன்வைத்த கோரிக்கைகளை அமைச்சா் ஏற்றுக் கொண்டாா். பின்னா் நிதித் துறையுடன் பேசிவிட்டு பதில் அளிப்பதாக கூறிய அமைச்சா் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இதனால், பிரச்சினைக்கு பேச்சின் மூலம் தீா்வுகாண முன்வராத அரசைக் கண்டித்து வியாழக்கிழமை (அக். 9) கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.