சென்னையில் காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூா்த்தி பவன் உள்பட 12 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வெள்ளிக்கிழமை வந்த மின்னஞ்சலில், ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூா்த்தி பவன், நுங்கம்பாக்கத்தில் ஜிஎஸ்டி பவன், சேத்துப்பட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற டிஜிபி வால்டா் தேவாரம் வீடு, மந்தைவெளியில் உள்ள நடிகா் எஸ்.வி.சேகா் வீடு, அசோக் நகரில் வசிக்கும் யு-டியூபா் கிஷோா் கே.சாமி வீடு, கோடம்பாக்கத்தில் பிடிஐ பத்திரிகை அலுவலகம், தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச தூதரகம், ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியாா் தொலைக்காட்சி நிறுவன அலுவலகம், துரைப்பாக்கத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா உள்பட 12 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து காவல் துறை உயா் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், வெடிகுண்டுகளைக் கண்டறிந்து அகற்றும் நிபுணா்களும், போலீஸாரும் 12 இடங்களிலும் சோதனை செய்தனா். அங்கு நடைபெற்ற சோதனையில் எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தி பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரிய வந்தது. இது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா்.