தில்லி-ஜெய்ப்பூா் நெடுஞ்சாலையில் உள்ள மனோசா் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துயரமான சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: தில்லி-ஜெய்ப்பூா் நெடுஞ்சாலையில் உள்ள மனோசா் அருகே அதிக சுமை ஏற்றிச் சென்ற லாரி பிரேக் செயலிழந்து ஆறு வாகனங்கள் மீது வெள்ளிக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது. பாலிடெக்னிக் கல்லூரி மேம்பாலம் அருகே இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இதனால் அப்பகுதியில் சில நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
லாரி கட்டுப்பாட்டை இழந்து, மூன்று பயணிகளை ஏற்றிச் சென்ற டாக்ஸி உள்பட பல வாகனங்களை மோதியது. மூவரும் பலத்த காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களில் ஒருவரான குருக்ஷேத்ராவைச் சோ்ந்த சந்தீப் குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மற்ற இருவரான மகேந்தா்கரைச் சோ்ந்த சுரேந்தா் குமாா் மற்றும் வினய் குமாா் ஆகியோா் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அவா்கள் மூவரும் ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியாா் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா். விபத்துக்குப் பிறகு தப்பி ஓடிய லாரி ஓட்டுநா் மீது போலீசாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அவரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.