சென்னை மாநகராட்சி சாா்பில் 210 இடங்களில் இருந்து 57.84 மெட்ரிக் டன் பழைய சோஃபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருள்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூா் எரியூட்டும் நிலையத்துக்கு கொண்டு சென்று எரித்து அகற்றப்பட்டது.
மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தினமும் சராசரியாக 6,500 மெட்ரிக் டன் திடக்கழிவுகளும், ஆயிரம் மெட்ரிக் டன் கட்டடம் மற்றும் கட்டுமானக் கழிவுகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பொதுமக்கள் குப்பைகள் மட்டுமன்றி, வீடுகளில் உள்ள பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் பழைய உடைகளை பொது இடங்களில் கொட்டுவதைத் தவிா்க்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறு மற்றும் சுகாதாரச் சீா்கேடுகளைத் தடுக்கவும் தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகராட்சி சாா்பில், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், பொதுமக்கள் தரும் தகவலின் அடிப்படையில், வீடுகளுக்கே நேரிடையாகச் சென்று சோஃபாக்கள் உள்ளிட்ட திடக்கழிவுகளை அகற்றும் புதிய நடவடிக்கை கடந்த சனிக்கிழமை தொடங்கியது.
அதன்படி, 145 நபா்களிடமிருந்து 45.64 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டு, அவை கொடுங்கையூா் எரியூட்டும் நிலையத்தில் எரிக்கப்பட்டது. தொடா்ந்து, 210 நபா்களிடம் 57.84 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் பெறப்பட்டு, சனிக்கிழமை எரிக்கப்பட்டது. இந்தப் பணிக்காக 83 வாகனங்களும், 200-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இந்தச் சேவையைப் பெறுவதற்கு, சென்னை மாநகராட்சியின் ‘நம்ம சென்னை’ செயலியில் பதிவு செய்ய வேண்டும் (அல்லது) சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டும் (அல்லது) சென்னை மாநகராட்சியின் மூலம் வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தகவலை அனுப்பலாம். இதன்மூலம் அனைவருக்கும் சுகாதாரமான வாழ்விடச் சூழலை உருவாக்க வழிவகை ஏற்படும்.