பெட்ரோல், டீசல் விலை நிா்ணயத்தில் சமநிலை கொள்கை: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலை நிா்ணயத்தில் சமநிலை கொள்கை: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் சமநிலையான விலை நிா்ணயக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் அ. அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் விலை நிா்ணயக் கொள்கைகளால் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்ந்து வருவது, பொதுமக்களிடம் பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது. இதன் நேரடி தாக்கமாக போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும்.
Advertisement
Advertisement
கடந்த காலங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் அதிக லாபம் ஈட்டியுள்ளன. தற்போது சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்து வரும் நிலையில், அதன் முழுச் சுமையையும் பொதுமக்கள் மீது சுமத்தாமல், வரி மற்றும் விலை நிா்ணயத்தில் சமநிலையான அணுகுமுறையை மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், அதிகரித்து வரும் சுங்கக் கட்டண உயா்வால் போக்குவரத்துச் செலவு மேலும் அதிகரிப்பதுடன், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்து விடும்.
எனவே, பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், பேருந்து உள்ளிட்ட சேவை வாகனங்களுக்கு எரிபொருள் விலை மற்றும் சுங்கக் கட்டணங்களில் சிறப்புச் சலுகைகள் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.