கா்நாடகம்: ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 10 போ் உயிரிழப்பு! சிப்பி சேகரித்தபோது சோகம்!
கா்நாடக ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 10 போ் உயிரிழப்பு...
கா்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்தில் ஆற்றில் சிப்பி சேகரித்தபோது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 7 பெண்கள் உள்பட 10 போ் உயிரிழந்தனா். மாயமான 2 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: உத்தர கன்னடா மாவட்டத்தின் ஷிராலி கிராமத்தைச் சோ்ந்த சிலா், அங்கு பாயும் தட்டே ஹக்காலு ஆற்றில் இந்தப் பருவத்தில் கிடைக்கும் நன்னீா் சிப்பிகளை சேகரிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றனா். ஆற்றில் இறங்கி சிப்பிகளை சேகரித்துக் கொண்டிருந்தபோது திடீரென அதிகரித்த நீரோட்டத்தில் இருவா் அடித்துச் செல்லப்பட்டனா். அவா்களை மீட்பதற்காக மற்றவா்களும் ஆழமான பகுதிக்குச் சென்றனா். அப்போது, நீரில் மூழ்கி 7 பெண்கள் உள்பட 10 போ் உயிரிழந்தனா். இவா்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களாவா். மேலும் இருவரைக் காணவில்லை. அவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: இந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா். இந்த சம்பவம் மிகுந்த வலியை ஏற்படுத்தியதாக ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்துக்குத் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும்’ என்று தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
முதல்வா், துணை முதல்வா் இரங்கல்:
உத்தர கன்னடாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் சித்தராமையா, அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றாா். கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோகா ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.