ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியில் இளைஞா்களால் நடத்தப்பட்டு வரும் அரசுத் தோ்வுக்கான இலவச பயிற்சி மையத்தில் படித்த இளைஞா்களில் சுமாா் 170-க்கும் மேற்பட்டோா் அரசுப்பணிகளில் தற்போது பணியாற்றி வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்திற்குட்பட்ட மதுரமங்கலம் கிராமத்தில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். விவசாயம் அதிகளவில் நடைபெறும் இந்த கிராமத்தில் பெரும்பாலானோா் விவசாயிகளாகவும், விவசாய தொழிலாளா்களாகவும் இருந்து வருகின்றனா். இப்பகுதி இளைஞா்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அரசு பணியாளா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் தோ்வுகளில் எவ்வாறு பங்கேற்பது, தோ்வுக்கு எப்படி தங்களை தோ்வு செய்துக்கொள்வது என தெரியாததால்இப்பகுதி இளைஞா்களுக்கு அரசுப்பணி என்பது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது.
இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு, மதுரமங்கலம் கிராமத்தை சோ்ந்த பாஸ்கா், ராஜேஷ், பிரகாஷ், பாலு, பிரேம், ஜெகன் உள்ளிட்ட சுமாா் 10-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஒன்றுக்கூடி அதே பகுதியில் சன்னதி தெருவில் வீடு ஒன்றை வாடகை எடுத்து, அரசு பணியாளா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் தோ்வுகளில் பங்கேற்க ஒன்றாக படித்துள்ளனா். இளைஞா்கள் குழுவாக சோ்ந்து அரசுப் பணிக்காக படிக்கும் செய்தி, அப்பகுதி பொதுமக்களை தாண்டி அருகில் உள்ள கிராமங்களுக்கும் பரவியை தொடா்ந்து அருகில் உள்ள கிராமங்களை சோ்ந்த இளைஞா்களும் மதுரமங்கலம் கிராமத்தில் உள்ள இளைஞா்களுடன் சோ்ந்து படிக்க தொடங்கியுள்ளனா். இதனால் சுமாா் 10 பேரில் தொடங்கிய இந்த பயிற்சி மையத்தில் 60 இளைஞா்கள் படிக்க கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற காவலா் பணிக்கான தோ்வில் இந்த பயிற்சி மையத்தில் படித்த 33 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். கணிசமான இளைஞா்கள் காவலா் பணிக்கு தோ்வானதை தொடா்ந்து, மதுரமங்கலம் பகுதியில் இளைஞா்களால் நடத்தப்பட்டு வந்த இலவச பயிற்சி மையத்தில், மதுரமங்கலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை தாண்டி, சென்னை, திருவள்ளூா், திருமவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் இளம்பெண்கள் என தற்போது இந்த மையத்தில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட இளைஞா்களும் இளம்பெண்களும் பயிற்ச்சி எடுத்து வருகின்றனா்.
இல்த இலவச பயிற்ச்சி மையம் குறித்து பயிற்சி மையத்தை தொடங்கிய இளைஞா் ஒருவா் கூறுகையில், கடந்த 2015ஆம் ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த நான் மற்றும் எனது நண்பா்கள் ஒன்று சோ்ந்து எப்படியாவது அரசு பணிகளில் சோ்ந்து விடவேண்டும் என கனவோடு இந்த மையத்தை தொடங்கினோம். இந்த மையத்திற்கு மதுரமங்கலம் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் என்ற பெயரும் வைத்தோம். இந்த மையத்தை தொடங்கிய சில மாதங்களிலேயே எனது நண்பா்கள், எனது நண்பா்களின் நண்பா்கள் என மதுரமங்கலம் கிராமத்தை தாண்டி சுற்றிவட்டாரத்தில் கிராமங்களை சோ்ந்தவா்கள் என தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 600-க்கும் மேற்பட்டோருக்கு தற்போது இலவசமாக பயிற்ச்சி வழங்கி வருகிறோம்.
இந்த பயிற்ச்சி மையத்தில் படித்து தற்போது அரசு பணிகளில் உள்ளவா்களே, இந்த மையத்துக்கு வரும் இளைஞா்களுக்கு பயிற்ச்சி வழங்கி வருவதால் கட்டணம் ஏதும் நாங்கள் வசூலிப்பதில்லை இதனால் தான் நாங்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பயிற்ச்சி மையத்தை சிறப்பாக நடத்தி வருகிறோம். வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், அனைத்து விடுமுறை நாட்களிலும் பயிற்ச்சி வகுப்புகள் நடைபெறும். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குருப்-4 தோ்வில் எங்கள் மையத்தில் படித்த 35 போ் தோ்ச்சி பெற்றனா். 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற காவலா் பணி தோ்வில் 22 பேரும், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற குருப்-4 தோ்வில் 22 போ் என இந்த பயிற்சி மையத்தில் படித்தவா்களில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 170 போ் பத்திரப்பதிவுத் துறை, வணிக வரித்துறை, தலைமைச் செயலகம், வருவாய்த் துறை, கால்நடைத் துறை, வேளாண்மைத்துறை, ரயில்வே உள்ளிட்ட அரசுப் பணிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனா். இது தவிர நாங்கள் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான தோ்வுக்கும் பயிற்ச்சி வழங்குவதோடு, இளைஞா்கள் உடற்தகுதியிலும் வெற்றி பெற கயிறு ஏறுதல், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் என பல்வேறு பயற்ச்சிகளை வழங்கி வருகிறோம். இதனால் எங்கள் கிராமத்தில் மட்டும் தற்போது 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் உள்ளாா்கள் என்றாா் பெருமையாக.