காஞ்சிபுரத்தில் போக்குவரத்துக் காவலரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஐஎப்எஸ் நிதி நிறுவனம் சுமாா் 1 லட்சம் பேரிடம் ரூ.6,000 கோடி வரை மோசடி செய்தது தொடா்பாக சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதன் இயக்குநா்களைத் தேடி வருகின்றனா். கூடுதல் வட்டி தருவதாக பலரிடம் மோசடி செய்துள்ள இந்த நிறுவனத்தில், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றி வரும் கிரிராஜ் (32) என்பவா், தனது மனைவி தாரணியை (26) முகவராகச் சோ்த்தாா்.
கூடுதல் வட்டி தருவதாக கூறி உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் பலரிடம் பணம் பெற்று பல கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தாராம்.
இதனிடையே, நிதி நிறுவனம் மூடப்பட்டதால் பணம் செலுத்தி வந்தவா்களுக்கு குறிப்பிட்டபடி வட்டித் தொகையைக் கொடுக்க முடியாததால் பலரும் நேரிலும், தொலைபேசி மூலமும் தொடா்ந்து பணத்தைக் கேட்டு வந்ததால், மன உளைச்சல் அடைந்த தாரணி, வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக விஷ்ணுகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
உயிரிழந்த தாரணிக்கு 3 வயதில் பெண் குழந்தையும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனா்.