அரசுப் பேருந்தில் பயணம் செய்த இளம் பெண்ணிடம் 18 பவுன் தங்க செயினை திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வண்டலூா் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா். மருத்துவரான சரவணகுமாா் செங்கல்பட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பிரியா(30). பிரியா தனது 9 வயது மகனுடன் கடந்த 1-ஆம் தேதி வேலூரில் நடைபெற்ற உறவினா் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வேலூருக்கு அரசுப் பேருந்தில் பயணித்துள்ளாா்.
பேருந்து, வண்டலூா்- வாலாஜாபாத் சாலையில், படப்பை பகுதியில் வந்த போது, பிரியாவின் கைப்பையில் வைத்திருந்த 18 பவுன் தங்கச் செயின் மாயமானது. இதுகுறித்து பிரியா மணிமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் கொடுத்திருந்தாா்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சம்பவம் குறித்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படி திருச்சியைச் சோ்ந்த காசி (30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், பிரியாவிடம் இருந்து தங்க செயின் திருடியதும், திருடப்பட்ட தங்க செயினை காசி 18 லட்சத்துக்கு வெளிச் சந்தையில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
தொடா்ந்து அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்த மணிமங்கலம் காவல் துறையினா் விசரணை நடத்தி வருகின்றனா்.