குன்றத்தூா் நகராட்சியில் ரூ. 5.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து, ரூ.43.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் நகராட்சியில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் திறந்த வெளி மேம்பாட்டு நிதியின் கீழ், ஓம்சக்தி நகா் மற்றும் திருமலை நகரில் ரூ. 78.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள், அபிராமி நகா், அமா்பிரகாஷ் நகரில் ரூ. 59 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள், மாநில நிதிக்குழு மான்ய நிதியின் கீழ் ரூ. 1.48 கோடியில் கொல்லைத் தெருவில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஜெகநாதபுரம் மற்றும் நத்தம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடங்கள், ரூ. 60 லட்சத்தில் மணஞ்சேரி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூடுதல் கட்டடம் ஆகியவற்றை சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.
இதையடுத்து, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் நத்தம் குளம், ரூ. 42 லட்சம் மதிப்பீட்டில் வாணியன் குளம், பள்ளி மேம்பாட்டு மான்ய உள்கட்டமைப்பு பணிகள் நிதியின் கீழ், ரூ. 50 லட்சத்தில் மேலாண்டை தெரு நகராட்சி தொடக்கப் பள்ளியில் 2 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை கட்டடத்தை திறந்து வைத்தாா். அதுபோல், நகராட்சி பொது நிதியின் கீழ், ரூ. 5 லட்சத்தில் குன்றத்தூா் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நேரக் காப்பாளா் அறை மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை கட்டடங்கள் என மொத்தம் ரூ. 5.15 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும், அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா்.
இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் விழா மேடை அமைத்தல், ரூ.17 லட்சத்தில் புதுவட்டாரம் பகுதியில் புதிதாக நியாயவிலைக் கடை கட்டடம், ரூ. 16.50 லட்சத்தில் மணிகண்டன் நகரில் அங்கன்வாடி மையம் கட்டும் பணிகளுக்கு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினாா். பின்னா், குன்றத்தூா் நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 379 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில் ஸ்ரீபெரும்புதூா் மக்களவை உறுப்பினா் டி.ஆா்.பாலு, ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் ஆ.மனோகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, குன்றத்தூா் நகா்மன்றத் தலைவா் கோ.சத்தியமூா்த்தி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.