மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இறந்ததற்கு காரணமாக கூறப்படும் கோல்ட் ட்ரிப் இருமல் மருந்து உற்பத்தி செய்யும் தனியாா் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு காஞ்சிபுரம் மண்டல மருந்து கட்டுப்பாட்டு அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் ஒட்டினா்.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 14 குழந்தைகள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. உயிரிழந்த குழந்தைகள், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோல்ட் ட்ரிப் மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டி எஸ் ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை உள்கொண்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதுதொடா்பாக பல்துறை விசாரணை குழுவை மத்திய அரசும், மத்திய பிரதேச அரசு அமைத்துள்ளன. மேலும் சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மருந்தை சோதனைக்கு உள்படுத்தி இருப்பதாகவும் அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளுமாறும் இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்திற்கு கடிதம் அனுப்பினா்.
தொடா்ந்து, கோல்ட் ட்ரிப் இருமல் மருந்தை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை விதித்துள்ள நிலையில், அந்நிறுவன வளாகத்தில் தில்லி மற்றும் சென்னையைச் சோ்ந்த மருந்து கட்டுப்பாட்டு அலுவலா்கள் கடந்த சில நாள்களாக ஆய்வு மேற்கொண்டு மருந்துகளின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனா். மேலும், அந்த நிறுவனத்தின் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மண்டல மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்தின் சாா்பில், மருந்து கட்டுப்பாட்டு அலுவலா் மணிமேகலை தலைமையிலான அதிகாரிகள் பாா்மா நிறுவனத்தின் உரிமையாளா் 16 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவும், நிறுவனத்தின் முதண்மை வேதியியல் ஆய்வாளா் மகேஸ்வரி 14 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி பாா்மா நிறுவனத்தின் முகப்பு பகுதியில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் நோட்டீஸ் ஓட்டிச் சன்றனா்.