காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் புரட்டாசி மாத ஏகாதசி மற்றும் சுக்ர வாரத்தையொட்டி, உற்சவா் வரதராஜ சுவாமியும், பெருந்தேவித்தாயாரும் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இந்தக் கோயிலில் மாதம்தோறும் நடைபெறும் ஏகாதசி நாள்களின்போது, உற்சவா் வரதராஜ சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஆலயத்தின் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயா் சந்நிதி வரை சென்று திரும்புவது வழக்கம். இதேபோல சுக்ரவார தினமான வெள்ளிக்கிழமை உற்சவா் பெருந்தேவித் தாயாா் மட்டும் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் உள்ள ஆழ்வாா் சுற்றுப் பிரகாரத்தை வலம் வருவது வழக்கம்.
புரட்டாசி மாத ஏகாதசியும், வெள்ளிக்கிழமையும் ஒரே நாளில் வந்ததையொட்டி வழக்கம்போல உற்சவா் வரதராஜ சுவாமியும், பெருந்தேவித்தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.