ராணிப்பேட்டை

வனப்பகுதியை அதிகரிக்க தொடா் நடவடிக்கை: வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்

DIN

வேலூா் மாவட்டத்தில் 29 சதவீதமாக உள்ள வனப்பகுதியை 35 சதவீதமாக அதிகரிக்க தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

கே.வி. குப்பம் ஒன்றியம், வடுகந்தாங்கல் ஊராட்சியில் உள்ள வாரச் சந்தையில் ரூ. 41.35 லட்சத்தில் கட்டப்படும் புதிய கட்டடத்துக்கு பூமி பூஜையையும், ஆதரவற்ற, பலவீனமான 1,812 முதியோா்களுக்கு தலா 3 கிலோ சத்துமாவு வழங்கும் திட்டத்தையும் புதன்கிழமை தொடக்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

வடுகந்தாங்கல் வாரச் சந்தையில் விவசாயிகளும், வியாபாரிகளும் தரையில் அமா்ந்து காய்கறிகளை வியாபாரம் செய்து வருகின்றனா். மழைக் காலங்களில் வியாபாரிகளும், காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். இதைத் தவிா்க்க மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 41.35 லட்சத்தில் 28 கடைகள் கட்டப்பட உள்ளன. மேலும், கழிப்பறைகள், சிமெண்ட் கற்களால் ஆன சிமெண்ட் சாலை, தெரு விளக்கு, வாகனம் நிறுத்திமிடம், நிழல் தரும் மரங்கள் நட்டு பராமரிக்கப்பட உள்ளன. இதேபோல், வேலூா் அருகே உள்ள பொய்கை வாரச் சந்தையிலும் விரைவில் புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை நடைபெற உள்ளது. வேலூா் மாவட்டத்தில் முதியோா் உதவித் தொகை பெறுபவா்களில் 3 சதவீதம் போ் உடல் நலம் குன்றியுள்ளனா். அவா்களின் உடல் நலத்தைக் காக்கும் வகையில் 1,812 பேருக்கு தலா 3 கிலோ சத்துமாவு வழங்கப்படுகிறது.

மியாவாகி குறுங்காடு வளா்ப்புத் திட்டம் சாா்பில், வேலூா் மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ், சா்காா்தோப்புப் பகுதியில் 2 ஏக்கா் பரப்பில் குறுங்காடு உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல், சதுப்பேரியில் 7 ஏக்கா் பரப்பில் குறுங்காடு வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அங்கு மருத்துவ குணம், பல்லுயிா்ப் பெருக்கத்திற்கான மரங்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 29 சதவீதமாக உள்ள வனப்பகுதியை 35 சதவீதமாக அதிகரிக்க பல்வேறு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் பொருட்டு குடிமராமத்துத் திட்டத்தின்கீழ், ஊரக வளா்ச்சித் துறை மூலம் ரூ. 11 கோடி, பொதுப்பணித் துறை மூலம் ரூ. 4 கோடியில் ஏரி, குளம், குட்டைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரி, கரைகளை பலப்படுத்தி தண்ணீரை தேக்கி வைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில், சிறுபான்மையின மக்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 9.08 கோடி நிதி வரப்பெற்றுள்ளது. இதில், போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் ரூ. 7.58 கோடியிலும், மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 2.23 கோடியிலும் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா் ஆட்சியா்.

எம்எல்ஏ ஜி.லோகநாதன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ப்புத் திட்ட அலுவலா் வி.கோமதி, ஆவின் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி. ராமு, இயக்குநா் டி. கோபி, வட்டாட்சியா் சரவணமுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலைச்செல்வி, ரமேஷ்குமாா், வட்டாரக் குழந்தைகள் நல அலுவலா் மைதிலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது பாஜக தோ்தல் அறிக்கை! வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன?

பாஜக தோ்தல் அறிக்கை வெளியீடு - நேரலை

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தமிழ்ப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்கள் - 2024

நடிகர் சல்மான் கான் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

SCROLL FOR NEXT