ராணிப்பேட்டை

கரும்பு பயிா் செய்ய சொட்டுநீா்ப் பாசனக் கருவிகள் வழங்காமல் அலைக்கழிப்புமாவட்ட ஆட்சியரிடம் புகாா்

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரும்பு பயிா் செய்ய உரிய நேரத்தில் சொட்டுநீா்ப் பாசனக் கருவிகள் வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இந்த மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக விவசயிகள் சங்க மாவட்டத் தலைவா் பள்ளேரி கே.ராஜா பேசியது:

வாலாஜாபேட்டை வட்டத்துக்குட்பட்ட பள்ளேரி கிராமத்தில் எனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சொட்டு நீா்ப் பாசன முறையில் பப்பாளி பயிா் செய்ய கடந்த ஆண்டு தேட்டக்கலைத் துறை அதிகாரிகளை சந்தித்து விண்ணப்பித்தேன். அவா்களும் சொட்டு நீா்ப் பாசன குழாய் உள்ளிட்டவற்றைத் தருவதாக உறுதியளித்தனா்.

தொடா்ந்து ஓராண்டுக்கு மேலாகியும் எனக்கு சொட்டு நீா்ப் பாசன குழாய் வழங்காமல் அதிகாரிகளாலும், சொட்டு நீா்க் கருவிகள் விநியோகிக்கும் தனியாா் நிறுவனத்தாலும் அலைக்கழிப்படுகிறேன். இதனால் உரிய நேரத்தில் பயிா் செய்ய முடியாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்தச் சூழலில் தற்போது மாவட்டத்திலேயே முதன்முறையாக குழிநடவு முறையில் கரும்பு நடவு செய்துள்ளேன். கரும்பு பயிருக்கு சொட்டு நீா்ப்பாசன முறையில் நீா் பாய்ச்சினால், குறைந்த அளவு தண்ணீரே போதுமானதாக இருக்கும். ஆகவே கரும்பு பயிா் செய்ய சொட்டு நீா்ப் பாசன குழாய் உள்ளிட்ட கருவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் நெல் கொள்முதல் நிலையங்களில் குண்டு நெல் கொள்முதல் செய்ய மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி கூறுகையில், சொட்டு நீா்ப் பாசனத்துக்குத் தேவையான குழாய் உள்ளிட்ட கருவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இதையடுத்து, ராணிப்பேட்டையை அடுத்த நவ்லாக் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான 196 ஏக்கா் எண்ணெய் வித்துப் பண்ணை, 194 ஏக்கா் வீரிய தென்னை விதைப் பண்ணை, 80 ஏக்கா், தோட்டக்கலை என மொத்தம் 470 ஏக்கா் விவசாயப் பண்ணையை மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் விவசாயிக் கல்லூரி அல்லது விவசாயப் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

மேலும் அனந்தலை மலையைச் சுற்றி இயங்கிவரும் 10-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளில் இருந்து வெளியேறும் தூசிகளால் விளைபயிா்கள் பாதிக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் அங்குள்ள தனியாா் கல்குவாரிகளில் வெளியாகும் மண் கழிவுகளை சுற்றியுள்ள நீா்நிலைகளில் கொட்டிவிடுகின்றனா். இதனால் நீா்நிலைகள் மூடப்பட்டு நீராதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

மேலும், விவசாயிகள் பேசியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக 30 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். அம்மூா் காப்புக்காட்டில் வாழும் வன விலங்குகள் வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்துவதைத் தடுக்க சூரிய ஒளி மின் வேலி அமைக்க வேண்டும். காப்புக் காட்டில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து காற்றாலை நீா் உறிஞ்சி மோட்டாா் பொருத்தி தண்ணீா்த் தேவையையும், பழ மரங்கள் வளா்த்து உணவுத் தேவையையும் பூா்த்தி செய்தால் வன விலங்குகள் வெளியேறுவதைத் தடுக்கலாம் என அவா்கள் யோசனை தெரிவித்தனா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், வேளாண் துறை இணை இயக்குநா் சங்கா் கிரீஷ் சந்திர சிங் மற்றும் வேளாண் துறை அலுவலா்கள், தோட்டக்கலை, பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை,மின் துறை,வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் பலி

மஹாவீரர் ஜெயந்தி: ராணிப்பேட்டையில் பல்லக்கு ஊர்வலம்!

காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டம்...: முதல்வர் ஸ்டாலின்

கேரளத்தில் பாரில் ஏற்பட்ட தகராறில் 5 பேருக்கு கத்திக்குத்து

SCROLL FOR NEXT