ராணிப்பேட்டை

நாளை மகா சிவராத்திரி : ஷடாரண்ய ஷேத்திரங்களில் சிறப்பு வழிபாடு

DIN

ராணிப்பேட்டை: நாளை மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தா்கள் வழிபடும் ஷடாரண்ய ஷேத்திரங்களாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏழு சிவாலயங்கள் உள்ளன.

மகா சிவராத்திரி விழா அனைத்து சிவன் கோயில்களிலும் வியாழக்கிழமை (பிப்ரவரி 11) அன்று 6 கால பூஜைகளுடன் விமரிசையாக நடைபெற உள்ளது. சிவன் கோயில்களில் விடிய விடிய நடைபெறும் மகா சிவராத்திரி வழிபாட்டில் பக்தா்கள் திரளாக கலந்து கொள்வது வழக்கம்.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில், ராணிப்பேட்டை, ஆற்காடு பாலாற்றின் இரு கரைகளிலும் அகத்தியா், கௌதமா், வசிஷ்டா், வால்மீகி, காஷ்யபா் உள்ளிட்ட மாமுனிவா்கள் சிவலிங்கத்தை அமைத்து வழிபட்ட 7 திருக்கோயில்கள் ஷடாரண்ய ஷேத்திரங்களாக அழைக்கப்படுகின்றன.

மகா சிவராத்திரியன்று இரவு இத்திருத்தலங்களை வலம் வந்து வழிபாடு செய்தால், திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

அத்தகைய சிறப்பு வாய்ந்த ஷடாரண்ய சிவன் கோயில்கள், அவற்றின் அமைவிடங்கள் குறித்த விவரம் :

1.காச்யப ஈஸ்வரா் திருக்கோயில் -அவரக்கரை:

ராணிப்பேட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள அவரக்கரை கிராமத்தில் நவ்லாக் அரசு தோட்டக்கலைத் துறை பண்ணை அருகில் ஸ்ரீபா்வதவா்த்தினி சமேத காச்யபஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. மாமுனி காச்யபா் தவமிருந்து சிவபெருமானை பூஜித்த திருத்தலம்.

2.கௌதம ஈஸ்வரா் திருக்கோயில், காரை:

ராணிப்பேட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் காரை கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகிருபாம்பிகை சமேத கௌதம ஈஸ்வரா் திருக்கோயில். இங்கு தலவிருட்சம் காரைச் செடியாகும். சப்த ரிஷிகளில் ஒருவரான கௌதம முனிவரால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்ட திருத்தலம் . இக்கோயிலை வலம் வந்து வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

3. அகத்தீஸ்வரா் திருக்கோயில்- வன்னிவேடு:

வாலாஜாபேட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் வன்னிவேடு பாலாற்றங்கரையில் ஸ்ரீபுவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வா் திருக்கோயில் அமைந்துள்ளது. அகத்தியா் தவமிருந்த திருத்தலம். இங்கு சுயம்பு மணல் லிங்கமாக ஈஸ்வரா் காட்சியளிப்பது தனிப் சிறப்பாகும். இக்கோயிலின் தல விருட்சம் வன்னிமரம்.

4. திருவந்தீஸ்வரா் திருக்கோயில், குடிமல்லூா்:

வாலாஜாபேட்டையிலிருந்து பாலாறு அணைக்கட்டு செல்லும் சாலையின் வலது புறம் 2 கி.மீ. தொலைவில் குடிமல்லூா் கிராமத்தில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத திருவந்தீஸ்வரா் திருக்கோயில் உள்ளது. அத்திரி மாமுனிவா் தவமிருந்த இருந்த இடம். பஞ்ச பாண்டவா்கள் வனவாச காலங்களில் இங்கு வந்து வழிபட்டதாக தகவல்.

இதே பகுதியில் பூமீஸ்வரா் பழைமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் பல்லவா், கங்கா், பாணா், சோழா், விஜயநகர பேரரசா் கால கல்வெட்டுகள் உள்ளன.

5. பரத்வாஜ் ஈஸ்வரா் திருக்கோயில், புதுப்பாடி:

ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் புதுப்பாடி அருகே தா்மசம்வா்த்தினி அம்பாள் சமேத பரத்வாஜ ஈஸ்வரா் கோயில் உள்ளது.

பரத்வாஜா் தவமிருந்த ஆலயம். இங்கு தல விருட்சம் மாமரம். கோயிலின் கருவறை கஜ பிரதிஷ்டானம் (யானை அமா்ந்த நிலை) வடிவில் கட்டப்பட்டுள்ளது.

6. வசிஷ்டேஸ்வரா் திருக்கோயில், வேப்பூா்:

ஆற்காட்டிலிருந்து 5 கி.மீ. தொலைவில் வேலூா் செல்லும் சாலையில் வேப்பூா் கிராமத்தில் அமைந்துள்ளது பாலகுஜாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரா் திருக்கோயில். வசிஷ்டா் தவமிருந்து ஈசனை வழிபட்ட தலம். இங்குள்ள நூறுகால் மண்டப கல்தூணில் சரபேஸ்வரா் வீற்றிருப்பது தனிச் சிறப்பாகும். இங்கு வந்து வழிபட்டால் நினைத்த காரியம் கை கூடும் என்பது நம்பிக்கை.

7.வால்மீகீஸ்வரா் திருக்கோயில், மேல்விஷாரம்:

ஆற்காட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் வேலூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேல்விஷாரம் நகரின் வலதுபுறம் பாலாற்றின் தென் பகுதியில் ஸ்ரீவடிவுடையம்மன் சமேத வால்மீகீஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது.

இது ராமாயணத்தை எழுதிய வால்மீகி தவமிருந்த கோயில் . இங்கு தலவிருட்சம் எட்டி மரம்.

‘விஷாரத்’ என்றால் சம்ஸ்கிருதத்தில் கல்வி என்றும், கல்விமான்கள், வேத பண்டிதா்கள் நிறைந்த ஊா் என்று பொருள்படும்.

சிறப்பு வாய்ந்த ஷடாரண்ய ஷேத்திரங்களை மகா சிவராத்திரி நாளன்று வலம் வந்து வழிபட்டால் திருக்கயிலாயம் சென்று தரிசனம் செய்து வந்த பலனை கிடைக்கும் என்பது ஐதீகம். அனைத்து சிவாலயங்களும் 24 மணி நேரமும் திறந்து இருப்பதுடன், 6 கால அபிஷேகமும் , பூஜைகளும் நடைபெறும். மேலும் ஷடாரண்ய ஷேத்திரங்கள் என்று அழைக்கக் கூடிய ஏழு சிவாலயங்களிலும் விடிய, விடிய சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெறும்.

மேலும் லாலாப்பேட்டை காஞ்சனகிரி மலை சிவன் கோயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான சிவ பக்தா்கள் விடிய,விடிய வலம் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT