கோ- ஆப்டெக்ஸில் அடுத்த நான்கு மாதங்களுக்குள் நாளொன்றுக்கு ரூ.5 கோடிக்கு மேல் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, விற்பனையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோ-ஆப் டெக்ஸின் தீபாவளி சிறப்பு விற்பனையின் தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்டஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.
விழாவில் விற்பனையைத் தொடக்கிவைத்து, அமைச்சா் ஆா்.காந்தி செய்தியாளா்களிடம் கூறியது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, அனைத்து மாவட்டங்களிலும் தீபாவளி தள்ளுபடியுடன் கூடிய சிறப்பு விற்பனை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 154 கோ-ஆப்டெக்ஸ் கடைகளின் விற்பனை நாளொன்றுக்கு ரூ.40 லட்சத்துக்கு மட்டுமே இருந்தது. ஆனால் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற 5 மாதத்துக்குள்ளாக நாளொன்றுக்கு ரூ. 1.25 கோடி விற்பனை நடைபெறுகிறது.
இனி வரும் 4 மாத காலங்களில் இது ரூ.5 கோடிக்கு மேல் விற்பனையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு, ரூ. 10 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டு விற்பனை தீவிரப்படுத்தப்படும்.
குழந்தைகளுக்கென சிறப்பு துணி வகைகள் விற்பனையாகிறது. மற்ற இடங்களில் கிடைக்கும் பட்டு துணிவகைகளைக் காட்டிலும் கோ- ஆப் டெக்ஸில் உள்ள பட்டுத்துணிகளின் தரம் அதிகம்.
கோ-ஆப்டெக்ஸ் வேலூா் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சித்தூா், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 15 விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.7.67 கோடி விற்பனை செய்யப்பட்டது. தற்போது விற்பனை இலக்காக ரூ.20 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, கோ-ஆப்டெக்ஸ் பொது மேலாளா் ஆா். பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.