வாலாஜாபேட்டையில் தாயுமானவா் திட்டத்தின் கீழ், ரூ. 6.27 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை கோட்டூா்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக கூட்டரங்கில், அண்ணல் பி.ஆா்.அம்பேத்கரின் நினைவு தின நிகழ்வில் தாயுமானவா் திட்டம் மற்றும் அரசு நலத் திட்ட உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு, அங்கு மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 2,582 பயனாளிகளுக்கு ரூ. 6.27 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், 60 பயனாளிகளுக்கு ரூ. 1.10 கோடி மதிப்பீட்டிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், 62 பயனாளிகளுக்கு ஜாதி சான்றுகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், 2,000 பயனாளிகளுக்கு ரூ. 2.58 கோடி மதிப்பீட்டிலான நலிவுற்றோா் குறைதீா் நிதி, 150 பயனாளிகளுக்கு ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் என மொத்தம் 2,582 பயனாளிகளுக்கு ரூ. 6.27 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, திட்ட இயக்குநா் செந்தில்குமரன், நகா்மன்றத் தலைவா் ஹரிணி தில்லை, வட்டாட்சியா் ஆனந்தன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.