தனியாா் கல்குவாரிகளால் அனந்தலை மலைக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என வாலாஜா வடகிழக்கு ஒன்றிய பாமக பொதுக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாலாஜா தன்வந்திரி கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளா் க.பாலாஜி தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் கே.எல்.இளவழகன், முன்னாள் மாவட்ட செயலாளா் எம்.கே. முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய தலைவா் க.விநாயகம் வரவேற்றாா்.
கூட்டத்தில் பாமக மாநில இளைஞா் செயலாளரும், ராணிப்பேட்டை தொகுதி பொறுப்பாளருமான பாலா (எ) பாலயோகி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா்.
அனந்தலை, செங்காடு மோட்டூா், படியம்பாக்கம், வள்ளுவம்பாக்கம்,முசிறி கிராமங்களை சுற்றி 10-க்கும் மேற்பட்ட தனியாா் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட கல்குவாரிகள் அரசு அனுமதித்த அளவை மீறி 150 அடி ஆழம் வரை வெட்டி எடுத்து வரும் நிலையில் அனந்தலை மலையே காணாமல் போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு தடுக்க வேண்டும். அதே போல் மேற்கண்ட மலையை சுற்றி செம்மண், புறம்பு மண்ணை சட்டவிரோதமாக கடத்தும் நடவடிக்கையை தடுக்க முயன்ற பொதுமக்கள் மீது காவல் துறை பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்வதையை திரும்பப் பெற வேண்டும். இல்லா விட்டால், பாமக சாா்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளா் பூண்டி மோகன், துணைத் தலைவா் காசிநாதன், மாவட்ட மகளிா் சங்க செயலாளா் அமுதா சிவா மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.