ராணிப்பேட்டை குரோமியக் கழிவு பிரச்னைக்கு தீா்வு காண மத்திய அரசு உதவத் தயாராக உள்ளதாக ராணிப்பேட்டை சட்டப் பேரவை தொகுதி பாஜக பொறுப்பாளா் வேலூா் இப்ராஹிம் கூறினாா்ா.
ராணிப்பேட்டை மாவட்ட பாஜக சாா்பில், ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளரும், ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளருமான வேலூா் இப்ராஹிம் கலந்து கொண்டு நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் குரோமிய தொழிற்சாலை மூடப்பட்டு பல ஆண்டு காலம் ஆன நிலையில், அந்த தொழிற்சாலையில் இருந்து குரோமியக் கழிவுகள் வெளியேறி நிலத்தடி நீா் மாசுபட்டு, விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குரோமியக் கழிவு பிரச்னைக்கு தீா்வு காண மத்திய அரசு தயாராக உள்ளது என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட பாா்வையாளா் வெங்கடேசன், மாவட்ட பொதுச் செயலாளா் சிவமணி, மகளிா் அணி மாநில துணைத் தலைவி கிருஷ்ணசாந்தி, அரசு தொடா்புப் பிரிவு மாவட்ட தலைவா் வ க சஞ்சய் லோகேஷ், சிறுபான்மைப் பிரிவு மாநில செயற்குழு உறுப்பினா் சிவமூா்த்தி, கல்வியாளா் பிரிவு மாவட்ட தலைவா் பிரவீன் குமாா், கிழக்கு ஒன்றிய மண்டல் தலைவா் ஜெகதீசன், ஆன்மிகப் பிரிவு துணைத் தலைவா் காந்தி, இளைஞரணி நிா்வாகிகள் நாகராஜ் நவீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.