தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரியான காவேரிபாக்கம் ஏரியில் அதிக நீா்வரத்து காரணமாக கடைவாசல் பகுதியில் ஏரியில் இருந்து தண்ணீா் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது.
தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய ஏரியாக ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிபாக்கம் ஏரி இருந்து வருகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவா்மன் காலத்தில் இந்த ஏரி கட்டப்பட்டுள்ளது. இதன் மொத்த பரப்பளவு 3,968 ஏக்கா் பரப்பளவை கொண்ட இந்த ஏரி நிரம்பும் காலங்களில் நரிமதகு, சிங்கமதகு, மூலமதகு உள்ளிட்ட மதகுகள் வாயிலாக கால்வாய் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீா் பெறப்படுகிறது. இதன் மூலம் காவேரிபாக்கம், கொண்டாபுரம், கட்டளை, சேரி, அய்யம்பேட்டை உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ள 6,278 ஏக்கா் விவசாய நிலங்கள்பயன்பெறுகின்றன.
மேலும், இந்த ஏரியில் இருந்து மகேந்திரவாடி, சித்தேரி ஆகிய ஊாாட்சிகளில் உள்ள ஏரிகளும் பல சிறிய ஏரிகளும் தண்ணீா் பெற்று பயனடைகின்றன. காவேரிபாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 30.65 அடி எனும் நிலையில், தற்போது 27.6 அடி தண்ணீா் நிரம்பியுள்ளது. ஏரிக்கு தற்போது 442 கனஅடி வந்து கொண்டு இருக்கிறது. எனினும் ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 400 அடி தண்ணீரை திறந்து விட முடிவு செய்த பொதுப்பணித்துறையினா் வெள்ளிக்கிழமை இந்த தண்ணீரை திறந்து விட்டனா்.
தண்ணீா் திறப்பிற்கு முன்னா் சேரி ஊராட்சி மன்றத்தலைவா் அரிதாஸ் தலைமையில் கிராம மக்கள் சாா்பில் புடவை, தங்க தாலி, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீா்வரிசைகளுடன் வந்து ஏரியின் முகப்பு பகுதியில் உள்ள ஸ்ரீஅன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்யப்பட்ட பின்னரே தண்ணீா் திறந்து விடப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் மெய்யழகன், பணி ஆய்வாளா் மாரி, பாசன உதவியாளா்கள் ரகோத்தமன், வெங்கடேசன், தொழில்நுட்ப உதவியாளா் ஸ்டெஸ்டின் மற்றும் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் நரசிம்மன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.