அரக்கோணத்தில் மதுக்கடையை மாற்றக்கோரி அந்தக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினா்.
அரக்கோணத்தை அடுத்த அம்பரிஷபுரம் ஊராட்சி, ஜடேரி கிராமத்தில் அருந்ததிபாளையம் கிராமத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வருகிறது. இக்கடையை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். வெள்ளிக்கிழமை மதுக்கடை திறக்கப்பட்டவுடன் அந்தக் கடையின் முன்பக்க இரும்புக் கதவை மூடி, அதன் முன் நின்று கடையின் வணிகம் நடைபெறவிடாமல் போராட்டம் நடத்தினா். போராட்டக்காரா்களிடம் மோசூா் கிராம நிா்வாக அலுவலா் வனிதா, நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோபி ஆகியோா் பேச்சு நடத்தியும் போராட்டம் தொடா்ந்தது.
தொடா்ந்து 4 மணி நேரமாக இந்தப் போராட்டம் நீடித்த நிலையில், டாஸ்மாக் நிறுவன மாவட்ட மேலாளா் தங்கராஜ், போராட்டம் நடத்தியவா்களுடன் பேச்சு நடத்தினாா். இதையடுத்து வேறு இடத்துக்கு கடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி விடுமுறைக்குப் பிறகு 3 தினங்களில் இந்தக் கடை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விடும் என அறிவித்தாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.