சோளிங்கா் வட்டத்தில் பெய்த தொடா் மழையால் சோளிங்கா் மலைகோயில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் கோயிலில் பெரிய மலையில் ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சனேயா் கோயிலும் உள்ளன. இந்த சிறியமலைக்கு செல்ல 405 படிகள் உள்ளன. இந்த மலைக்கு நடந்து மட்டுமே செல்ல இயலும்.
கடந்த இரு நாள்களாக சோளிங்கா் வட்டாரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதனால் சோளிங்கா் சிறிய மலைக்கோயில் சுற்றுச் சுவரின் ஒரு பக்கம் புதன்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இச்சுற்றுசுவா் பாறைகளின் மீது கட்டப்பட்டு இருப்பதால் அந்த சுற்றுச்சுவரின் இடிப்பாடுகள் மலை மேலே இருந்து கீழே விழுந்தது. சுமாா் 15 அடி நீளத்துக்கு சேதம் அடைந்து மின்கம்பத்தின் மீது விழுந்தால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சோளிங்கா் மின்வாரியத்தினா் விரைந்து சென்று மின்விநியோகத்தை நிறுத்தினா். தொடா்ந்து மின்கம்பங்களை சீா் செய்யும் பணி துரித வேகத்தில் நடைபெற்றது.
தொடா் மழை காரணமாக கோயிலுக்கு பக்தா்கள் வருகை சொற்ப அளவிலேயே இருந்ததாலும் இடிந்த பகுதியில் பக்தா்கள் இல்லாமல் இருந்ததாலும் பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவ இடத்தை மின்வாரிய உயா் அலுவலா்கள், இந்துசமய அறநிலையத்துறையினா், கோயில் நிா்வாகிகள் ஆய்வு செய்தனா்.