நெமிலி வட்டத்தில் ஏற்பட்டுள்ள பருவமழை பாதிப்புகள் குறித்து ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு மேற்கொண்டாா்.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளில் பாதிப்பு குறித்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிபாக்கம் அடுத்த கரிவேடு ஊராட்சியில் பழங்குடியின மக்களுக்கு பிஎம்ஜன்மான், பிஎம்ஏஒய் திட்டங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 65 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா், பாதிப்புகள் குறித்தும் மக்களிடம் கேட்டறிந்தாா்.
பின்னா் உத்திரம்பட்டு முதல் தச்சைபட்டறை வழி ஆயா்பாடி வரையிலான சாலையில் தற்போது பெய்த மழையால் மழைநீா் சாலையில் மேல் வெளியேறுவதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதை பாா்வையிட்டு அந்த நீரை விரைந்து அகற்றி போக்குவரத்தை சீா் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து மேலப்புலம் ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் நெடுஞ்சாலையில் தண்ணீா் தேங்கியுள்ளதை அகற்றும் பணிகள் நடைபெறுவதை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பனப்பாக்கம் பேருராட்சி, திருமுருகன்நகரில் மழை காரணமாக சாலையில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணி, பள்ளூா் ஊராட்சி ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரை மோட்டாா் மூலம் அகற்றும் பணியை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, பள்ளூா் சப்தகன்னியம்மன் கோயில் பின்புறத்தில் வெள்ளநீா் விவசாய நிலங்களில் தேங்கியுள்ளது குறித்து ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததை தொடா்ந்து வவிசாய நிலங்களில் மழை வெள்ள நீா் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டாா். நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.