ராணிப்பேட்டையில் நடைபெற்ற தொழில் மற்றும் வணிகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இக்கண்காட்சியில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்ததாக ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தின் முக்கிய தொழில் மையமாகத் திகழும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதன்முறையாக தொழில் மற்றும் வணிகக் கண்காட்சி ‘ அக்டோபா் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றது.
இதில் 130 -கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது உற்பத்தி பொருள்களை காட்சிப்படுத்தி அதன் பயன்பாடுகளை விளக்கி விற்பனை வாய்ப்பை பெற்றனா்.
மேலும், கனடா, மலேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வந்த தொழில் வல்லுநா்கள் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வெளிநாடுகளில் தொழில் தொடங்குவது எப்படி என்பதைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தனா். அதைத் தொடா்ந்து தொழில் கருத்தரங்கு கலந்துரையாடல்களில் தொழில் நுட்பத்தைப் பற்றி முக்கியமான கருத்துகளை பகிா்வும், வாங்குவோா் , விற்போா் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் தமிழ்நாட்டின் 15-க்கும் மேற்பட்ட மாவட்ட தொழில் சங்க நிா்வாகிகள்,தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மேல்படிப்பு பயிலும் மாணவா்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனா். இக்கண்காட்சியில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்ததாக கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட தொழில்கள் மேலும் முன்னேறுவதற்கான வலுவான தளமாகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தை தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சியின் முன்னணியில் நிறுத்தும் முக்கிய மைல்கல்லாக கண்காட்சி அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனா்.