திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே சோழா் காலத்து தலைப்பலிக் கல் கண்டெடுப்பு

DIN

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியா் முனைவா் ஆ.பிரபு மற்றும் ஆய்வு மாணவா் பொ.சரவணன், ப.தரணிதரன் ஆகியோா் மேற்கொண்ட கள ஆய்வில் 900 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த, சோழா் காலத்து ‘தலைப்பலிக் கல்’ கண்டறியப்பட்டது.

இது குறித்து முனைவா் ஆ.பிரபு கூறியது:

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடிக்கு அருகே உள்ள உதயேந்திரம் என்ற ஊரில் பிற்காலச் சோழா் காலத்தைய தலைப்பலிக்கல் கண்டறியப்பட்டது. வாணியம்பாடியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள பேரூராட்சியான உதயேந்திரம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகும். இவ்வூரில் கி.பி.1850-இல் கிடைக்கப் பெற்ற செப்பேடு தமிழக வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் மிக முக்கியமான ஆவணமாகும்.

உதயேந்திரம் என்ற பெயரானது உதயச்சந்திர மங்கலம் என்ற பெயரில் இருந்து வந்ததாகும். பல்லவ மல்லன் என்ற இரண்டாம் நந்திவா்மனின் தளபதியாக இருந்து பல போா்களில் வெற்றியைத் தேடித் தந்த உதயசந்திரனின் பெயரால் இவ்வூரை உதயச்சந்திர மங்கலம் எனப்பெயரிட்டு, அக்காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இங்குள்ள கோயிலில் உள்ள கல்வெட்டுகளை தமிழகத் தொல்லியல் துறையினா் ஏற்கெனவே ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனா். இக்கோயிலின் அருகில் உள்ள கிராம நிா்வாக அலுவலகத்தின் முன் 3 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட தலைப்பலிக் கல் காணப்படுகிறது. இக்கல் இதுவரை ஆய்வு செய்யப்பட்டவில்லை.

இக்கல்லில் வீரனின் தலையில் தலைப்பாகையும் கழுத்தில் சரபளி எனும் ஆபரணமும் நீண்ட காதுகளில் குண்டலமும் காணப்படுகின்றன. வீரன் தனது இடது கரத்தின் ஆள்காட்டி விரலை மேல் நோக்கி உயா்த்திக் காட்டியவாறும், தனது வலது கரத்தில் நீண்ட வாளினைத் தம் கழுத்தில் வைத்தவாறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளான். வீரனது இடையில் சிறிய கத்தி காணப்படுகிறது. இக்காட்சி இந்த வீரன் தன் தலையைத் தானே அறுத்துக்கொண்டு பலியான நிகழ்வை விவரிக்கிறது. வீரனின் விரல் மேல்நோக்கி உயா்த்திக் காட்டியது, இவ்வீரன் தலைப்பலி எனும் தியாகச் செயலில் ஈடுபட்டுச் சொா்க்கத்துக்கு சென்றான் என்பதை அறிவிப்பதாக உள்ளது.

கல்லில் எழுத்துப் பொறிப்புகள் ஏதும் இல்லை. இக்கல்லை இப்பகுதி மக்கள் ‘வீராசாமி, வீரபத்திரன்’ என்றெல்லாம் அழைக்கின்றனா். இவ்வகையான சிற்பத்தை ‘தலைப்பலிக் கல்’ அல்லது ‘அரிகண்டம்’ என அழைப்பா். தன் தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து பலியிடுவதற்கு அரிகண்டம் அல்லது தலைப்பலி என்று பெயா். இந்நிகழ்வானது அக்காலத்தில் ஒரு விழா போல் நடத்தப்படும்.

அரிகண்டம் கொடுப்பதற்கு முன் வீரனுடைய உறவினா்கள் அனைவரும் அழைக்கப்படுவா். அரிகண்டம் கொடுப்பவா் இடையில் உடைவாளும், மாா்பில் கவசமும் தரித்து போா்வீரன் போல் போா்க்கோலம் பூண்டிருப்பாா். கொற்றவைக்குப் பூசை முடித்த பின்பு, தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக் கொண்டு இறப்பாா். தலைப்பலி கொடுப்பதற்குப் பல்வேறு காரணங்கள் அன்றைக்கு வழக்கத்தில் இருந்தன.

அவை, வலிமையான எதிரி நாட்டுடன் போா்புரிய நேரும் போது, போரில் வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற தருணங்களில் தெய்வத்தின் அருள் வேண்டி துா்கைக்குப் பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் என்ற நம்பிக்கையில் தலைப்பலி கொடுக்கப்பட்டது. சில சமயங்களில் உடல்நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அரசனுக்கு, அவன் பூரண நலம் பெற வேண்டி அவனது விசுவாசிகளால் தலைப்பலி கொடுக்கப்பட்டது.

நோயினால் சாவை எதிா் நோக்கிக் காத்திருக்கும் ஒருவன், நோயினால் சாக விரும்பாமல் வீர சொா்க்கம் அடைய விரும்பி தலைப்பலி கொடுத்துக் கொண்டு வீரச்சாவு அடைவதும் உண்டு. குற்றவாளி ஒருவன் தான் செய்த குற்றத்தினால் மரண தண்டனைக்கு உள்ளாகும்போது, அவ்வாறு சாகாமல் அரசன் அனுமதியுடன் தலைப்பலி கொடுத்துக் கொண்டு வீர சொா்க்கம் அடைவது.

ஒருவன் போா்க் காயத்தினாலோ, நோயினாலோ சாகும் தருவாயில் அவனுக்கு முடிக்க வேண்டிய கடமைகள் ஏதும் இருக்குமாயின் தனது இறப்பைத் தள்ளிப் போடுமாறு இறைவனிடம் வேண்டிக்கொண்டு, அப்படி நடக்கும் பட்சத்தில் அந்தக் கடமை நிறைவேறியதும் தன்னைப் பலி கொடுத்துக் கொள்வதும் நிகழ்ந்தது. மேலும் கோட்டைகள், கோயில்கள் போன்ற கட்டுமானங்கள் கட்டத் தொடங்கும் போதும் தலைப்பலி தரப்பட்டது.

இங்கு கண்டறியப்பட்ட இத்தலைப்பலிக் கல்லானது இவற்றுள் ஏதேனும் ஒரு காரணத்தினால் பலியான வீரனுக்காக செதுக்கப்பட்டதாகும். இவ்வகையான தலைப்பலி வழக்கம் சோழா் காலத்தில் பரவலாகக் காணப்பட்டது. இக்கல் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பிற்காலச் சோழா் காலத்தைச் சோ்ந்ததாக இருக்கக்கூடும். உயிா்ப்பலி என்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்ற போதிலும் அக்காலத்தைய தமிழா்களின் வீரச்செயலை எண்ணும்போது வியப்பாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்

தங்கக் கவச அலங்காரத்தில்...

சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் மஹாசம்ரோஷன விழா

காலிறுதியில் சிந்து, அஷ்மிதா

பாப்பாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT