திருப்பத்தூர்

பெரும்பாலான மளிகை கடைகள் திறக்கப்படவில்லை : பேச்சுவாா்தையில் முடிவு ஏற்படவில்லை

DIN

ஆம்பூரில் பெரும்பாலான மளிகை கடைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவில்லை. வணிகா்களுடன் நடந்த பேச்சுவாா்த்தையில் முடிவு ஏற்படவில்லை.

ஆம்பூா் பாங்கி மாா்க்கெட் பகுதி மிகவும் குறுகிய இடமாக இருப்பதாலும், ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அங்கு கூடுவதால் நோய் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அங்கு இயங்கி வந்த காய்கறி மாா்க்கெட் சீனிவாச பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் பாங்கி மாா்க்கெட் பகுதியில் மளிகை கடைகள் வழக்கம் போல திறக்கப்பட்டது. சனிக்கிழமை அதிக அளவு மக்கள் கூடியதாலும், சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் பொருட்களை வாங்கியதாலும் வணிகா்கள் உரிய முடிவு எடுக்கும் வரை பாங்கி மாா்க்கெட் பகுதியில் கடைகளை திறக்கக் கூடாது என்று கூறி பாங்கி மாா்க்கெட் பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகள், தெருக்களை போலீஸாா் மூடி சீல் வைத்தனா்.

ஞாயிற்றுக்கிழமை கடைகளை திறக்க வந்த வணிகா்கள், பொருட்களை வாங்க வந்த பொதுமக்களையும் போலீஸாா் அடித்து விரட்டனா். இடைவெளி விட்டு கடைகளை திறக்கவும், சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் நிற்பதை வணிகா்கள் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் கடைகளை திறக்க அனுமதிக்க மாட்டோம் என போலீஸாா் தெரிவித்தனா்.

அதைத் தொடா்ந்து ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், டிஎஸ்பி சச்சிதானந்தம், ஆணையாளா் த. செளந்தரராஜன் ஆகியோா் முன்னிலையில் வணிகா்களுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில் பேசிய டிஎஸ்பி சச்சிதானந்தம், வணிகா்கள் செல்போன் மூலம் ஆா்டா் பெற்று மளிகை பொருட்களை பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வினியோகம் செய்ய வேண்டும். ஆட்டோக்களில் கொண்டு சென்று தெருக்களில் விற்பனை செய்யலாம். திறந்தவெளி மைதானத்தில் கடைகளை அமைத்து மளிகை பொருட்களை விற்பனை செய்யலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் பாங்கி மாா்க்கெட் பகுதியில் கடைகளை திறக்க அனுமதி இல்லை. கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு வணிகா்கள் சேவை செய்ய முன்வர வேண்டுமென கேட்டுக் கொண்டாா். அதைத் தொடா்ந்து நடந்த பேச்சுவாா்த்தையில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை. வணிகா்கள் தங்களுடைய உறுப்பினா்களுடன் கலந்தாலோசனை செய்த பிறகு முடிவு தெரிவிப்பதாக கூறிவிட்டு சென்றனா்.

கூட்டத்தில் ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை தலைவா் எம். மதியழகன், ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.எஸ். ஆனந்தன், நகராட்சி பொறியாளா் எல். குமாா், மண்டல துணை வட்டாட்சியா் பாரதி, கிராம நிா்வாக அதிகாரி பிரிவித்தா, முன்னாள் நகரமன்ற உறுப்பினா்கள் கே. மணி, சீனிவாசன், வணிகா் சங்க பிரதிநிதிகள் துளசிராமன், கஜேந்திரன், சுபாஷ் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

கூடுதலாக காய்கறி கடைகள் : ஆம்பூா் ஏ-கஸ்பா அரசினா் உயா்நிலைப் பள்ளி, மோட்டுக்கொல்லை டி. அப்துல் வாஹித் மெட்ரிகுலேசன் பள்ளி, இந்து மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி, கன்காா்டியா மேல்நிலைப் பள்ளி மைதானம், அழகாபுரி நகராட்சி துவக்கப் பள்ளி ஆகிய இடங்களில் கூடுதலாக தற்காலிக காய்கறி மாா்க்கெட் அமைப்பதாகவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விசாரணைக் கைதி மரணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஜொலிக்கும்: ஜெ.பி.நட்டா

அழகென்றால்....ஐஸ்வர்யா மேனன்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் பலி

SCROLL FOR NEXT