நாட்டறம்பள்ளி அருகே ஊதுவத்தி தயாரிப்பு நிறுவனத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான மூலப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அதிபெரமனூரில் குருசேவ் என்பவருக்கு சொந்தமாக ஊதுவத்தி நிறுவனம் உள்ளது. இங்குள்ள கிட்டங்கியில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலா் கலைமணி தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து 3 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் கிட்டங்கியில் இருந்த பல லட்சம் மதிப்பிலான ஊதுவத்தி, சாம்பிராணி தயாரிக்க பயன்படுத்தும் 15 வகை மூலப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என நாட்டறம்பள்ளி போலீஸாா், வருவாய்த் துறையினா் விசாரித்து வருகின்றனா்.