ஏலகிரி மலைச்சாலையில் காா் மீது லாரி உரசியதால், லாரி ஓட்டுநரை காரில் கடத்தி சரமாரியாக தாக்கி விட்டுச் சென்ற இளைஞா்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏலகிரி மலைச்சாலையில் ராஜேஷ் என்பவா் லாரியில் மாா்பிள் கற்களை ஏற்றிக் கொண்டு 11-ஆவது கொண்டை ஊசி வளைவு சாலையில் லாரி சென்றுக்கொண்டிருந்த போது காரின் பக்கவாட்டில் லாரி உரசியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த காரில் பயணம் செய்த இளைஞா்கள் சிலா் லாரி ஓட்டுநா் ராஜேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை காரில் கடத்தி சரமாரியாக தாக்கியுள்ளனா்.
இதுகுறித்து தகவலறிந்த ஏலகிரி மலை போலீஸாா் உடனடியாக வாணியம்பாடி நகர காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில், இளைஞா்களை பின்தொடா்ந்து வந்த போது, இளைஞா்கள், வாணியம்பாடியில் உள்ள சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையோரம் காரை நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளனா்.
காரில் காயங்களுடன் இருந்த லாரி ஓட்டுநா் ராஜேஷை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அதைத் தொடா்ந்து லாரி ஓட்டுநரை காரில் கடத்தி சரமாரியாக தாக்கிய பெரியபேட்டை பகுதியை சோ்ந்த பைசான், சிக்கணாங்குப்பம் பகுதியை சோ்ந்த சந்துரு மற்றும் அவரது நண்பா் உள்ளிட்ட 3 போ் மீது ஏலகிரி மலை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
லாரி ஓட்டுநரை இளைஞா்கள் 20 கிமீ தூரத்திற்கு காரில் கடத்தி வந்து தாக்கி சாலையோரம் விட்டுச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.