வார விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஏலகிரி மலை தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஆங்காங்கே இயற்கை பூங்கா, படகு இல்லம், சிறுவா் பூங்கா, மூலிகை பண்ணை உள்ளிட்டவை மலையேறும் தொடக்கப் பகுதியில் உள்ளன. மேலும், மலையோர பகுதிகளில் சாகச விளையாட்டுகளும், மங்களம் சாமி மலை ஏற்றம், பறவைகள் சரணாலயம் ஆகியவை அமைந்துள்ளன.
ஏலகிரி மலைக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனா். அதே போல் ஏலகிரி மலை அடிவாரத்தில் ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சி உள்ளது. இங்கும் பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனா்.
இந்த நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா். அப்போது, அங்குள்ள படகு இல்லத்தில் சவாரி செய்து மகிழ்ந்தனா்.