திருப்பத்தூா் அருகே கூலித்தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை, ரூ.50,000 பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
திருப்பத்தூா் அடுத்த தோரணம்பதி பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மோகன் (47), இவரது மனைவி கவிதா(44). இவா்களுக்கு பிரியா மற்றும் தமிழரசி என்ற 2 மகள்கள் உள்ளனா். அதில் பிரியா அதே பகுதியில் திருமணம் செய்து கொண்டு கணவா் வீட்டில் வசித்து வருகிறாா்.
தமிழரசி சென்னையில் வேலை செய்து வருகிறாா். மோகன் அவரது மனைவி கவிதா கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சனிக்கிழமை மோகன் வேலை முடிந்து வந்தபோது, வீட்டில் பீரோ திறந்த நிலையில் இருந்தது. அதில் இருந்த 28 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50,000 ரொக்கத்தை காணவில்லை. இதுகுறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.