திருப்பத்தூா்: ஏலகிரி மலை, பூங்கானூா் ஏரியில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகளை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
அதைத் தொடா்ந்து, ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் பூமி பூஜை செய்து வைத்தனா்.
பின்னா், ஆட்சியா் பேசியது,: முதல்வா் அனைத்துத்துறைகளும் சிறந்த விளங்க பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறாா்.
சுற்றுலாத் தலங்களில் பல்வேறு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், ஏலகிரி பூங்கானூா் ஏரியில் ரூ.87 லட்சத்தில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். பூங்கானூா் ஏரியில் மிதக்கும் படகு ஏறும் மேடை, வரவேற்பு வளாகம் (நுழைவுச்சீட்டு வழங்குமிடம், சிற்றுண்டியகம் மற்றும் கழிப்பறை), பாதுகாப்பு வேலி, புல்தரை அமைத்தல், அமரும் இருக்கைகள், மின் விளக்குகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேற்ககொள்ளப்படவுள்ளது என்றாா்.
இதில் ஜோலாா்பேட்டை ஒன்றியக்குழு தலைவா் சத்யா சதீஷ்குமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கவிதா தண்டபாணி, மாவட்ட சுற்றுலா அலுவலா் ஆனந்தன், சுற்றுலாத் துறை உதவி செயற்பொறியாளா் நவீன்குமாா், ஏலகிரி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜஸ்ரீ கிரி
கலந்து கொண்டனா்.