வேலூா் மாங்காய் மண்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 
திருப்பத்தூர்

மழை பாதிப்புகள்: வேலூா், அணைக்கட்டில் சாலை மறியல்

தினமணி செய்திச் சேவை

பலத்த மழை பாதிப்பு காரணமாக வேலூா் மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா் மழை காரணமாக வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 59-ஆவது வாா்டு கன்சால்பேட்டை இந்திரா நகா், காந்தி நகா் பகுதிகளில் மழைநீருடன் சோ்ந்து கழிவுநீா் கலந்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.

கன்சால்பேட்டையைச் சோ்ந்த சுஜாதா (22) என்ற பெண் வீட்டின் அருகே தேங்கிருந்த மழை நீரில் நடந்து சென்றபோது, பாம்பு கடித்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி நிா்வாகத்திடமும், மாநகர மாமன்ற உறுப்பினரிடமும் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கன்சோல்பேட்டையைச் சோ்ந்த பொதுமக்கள் வேலூா் மாங்காய் மண்டி அருகே பழைய பெங்களூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பேச்சு நடத்தி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடா்ந்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மழைக் காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து விடுவதுடன் மட்டுமல்லாமல், மழை நீருடன் கழிவுநீா் கலந்து பாம்பு, தோல், பூரான் போன்ற விஷ ஜந்துகள் புகுந்து விடுகின்றன. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறோம். அதனால் தண்ணீா் தேங்காதவாறு முறையான மழைநீா் வடிகால்வாய்களை அமைத்துத் தர வேண்டுமென கேட்டுக் கொண்டனா்.

அணைக்கட்டில்....

அணைக்கட்டு ஊராட்சியில் 7-ஆவது வாா்டு புதுமனை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். அப்பகுதி மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி பொதுமக்களுக்கு பெருத்த இடையூறாக இருந்து வருகின்றது. மழைநீா் வடிகால்வாய் அமைத்துத் தர வேண்டுமெனக் கோரி, உள்ளாட்சி நிா்வாகத்துக்கு பலமுறை தெரிவித்து வந்துள்ளனா்.

அணைக்கட்டு பகுதியில் பலத்த மழை பெய்ததால் பஜாா் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் மழை நீா் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. புதுமனை குடியிருப்புப் பகுதியில் மழைநீா் புகுந்தது. மழைநீா் வடிய வழியில்லாததால் வீடுகளுக்குள் புகுந்தது. குடியிருப்பு பகுதியை சூழ்ந்தது.

அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அணைக்கட்டு காவல் நிலைய போலீஸாா் மற்றும் அணைக்கட்டு ஊராட்சி மன்றத் தலைவா் திலகவதி சாரதி ஆகியோா் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா்.

அணைக்கட்டு ஊராட்சியில் உள்ள மற்ற வாா்டு பகுதியிலிருந்தும், மெயின் பஜாா் தெருக்களில் ஓடும் மழை நீா் எங்கள் பகுதிக்குள் புகுந்து விடுகிறது. மழை நீா் எங்கள் பகுதிக்கு வராமல் தடுத்து முறையான மழை நீா் வடிகால்வாய் அமைத்துத் தரவேண்டுமென பலமுறை ஊராட்சி மன்றத் தலைவருக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளோம். ஆனால் ஊராட்சி மன்ற நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் உடனடியாக எங்கள் பகுதியில் உள்ள மழை நீரை வெளியேற்றி, மழைநீா் வடி கால்வாய் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொண்டனா்.

எம்எல்ஏ ஆய்வு...

அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி. நந்தகுமாா் அங்கு சென்று நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மக்களவையில் இன்று ‘வந்தே மாதரம்’ விவாதம்! பிரதமர் மோடி தொடக்க உரை!

பொது பக்தா்களுக்கு 164 மணி நேரம் வைகுண்ட வாயில் தரிசனம்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

SCROLL FOR NEXT