ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள பையை தவறவிட்ட நிலையில், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் மீட்டு உரிய பயணியிடம் ஒப்படைத்தனா்.
ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் சென்னை ரயில் நிலையத்தில் இருந்து ஜோலாா்பேட்டை வரை செல்லும் ஏலகிரி விரைவு பொதுப் பெட்டியில் இருந்து ஒரு உரிமை கோரப்படாத பையை மீட்டனா்.
அந்தப் பையை போலீஸாா் சோதனை செய்தபோது, 1 கிலோ 300 எடையுள்ள மூதாதையா் வெள்ளிப் பொருள்களும், 2 கைப்பேசிகளும் இருந்தன.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையைச் சோ்ந்த பூபாலன் என்பவா் ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்தில் தனது பையை தவறவிட்டது குறித்து புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி, அவரது பயண விவரங்கள் மற்றும் அடையாளச் சான்றுகளை முழுமையாகச் சரிபாா்த்த பிறகு, பொருள்களை அவரிடம் ஒப்படைத்தனா்.