செங்குன்றம் கூட்டுச் சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணி மந்தகதியில் நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
செங்குன்றம் - திருவள்ளூர் சாலையை இணையும் இடம் செங்குன்றம் கூட்டுச் சாலை. இந்த இடத்தில் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் ரவுண்டானா அமைக்கப்பட்டது.
ஆனால், வாகனங்களின் பெருக்கத்தாலும், ரவுண்டானாவின் வளைவு பெரிதாக இருப்பதாலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லவும், திருவள்ளூரில் இருந்து சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் செல்லவும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
இதையடுத்து, போக்குவரத்து காவல்துறையும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து கூட்டுச்சாலையில் உள்ள ரவுண்டானாவின் அளவை குறைக்க ஆய்வு செய்தனர்.
அதன்படி, ரவுண்டானாவின் அளவை குறைத்து, சாலையை விரிவுபடுத்தும் பணியை கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் தொடங்கினர்.
இப்பணி மந்தமாக நடைபெறுவதால், விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் தொடர்ந்து வருகிறது. இதனால், பள்ளி-கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, செங்குன்றம் கூட்டுச் சாலையில் விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.