சோழவரம் அருகே ஏரிப்பகுதியில் விளையாட சென்ற அண்ணன், தங்கை வியாழக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (35). அலமாதி பகுதியில்
பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சதீஷ் (13), மகள் பிரியலட்சுமி (10).
இந்நிலையில், பள்ளி விடுமுறை என்பதால், கிருஷ்ணமூர்த்தி குழந்தைகள் இருவரையும் தனது கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சதிஷும், பிரியலட்சுமியும், அருகில் உள்ள அலமாதி ஏரிக்கு விளையாடச் சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் இருவரும் தேங்கியுள்ள நீரில் குளிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில், இருவரும் நீரில் மூழ்கினர். இந்நிலையில், விளையாடச் சென்ற பிள்ளைகள் நீண்ட நேரம் ஆகியும் வராததால், கிருஷ்ணமூர்த்தி அவர்களை தேடியுள்ளார்.
அப்போது அலமாதி ஏரிக்கு சென்று பார்த்தபோது, இருவரும் நீரில் மூழ்கிக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் மீட்டு அருகில் உள்ள பூச்சி அத்திப்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சோழவரம் போலீஸார் இருவரின் சடலங்களையும் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.