திருவள்ளூர்

பூண்டி ஏரிக்கரை சாலை மது அருந்துவோரின் கூடாரமாகும் அவலம்

DIN

திருவள்ளூா் அருகே முக்கிய சுற்றுலாத் தலமான பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரைச் சாலையில் சமூக விரோதிகள், மது அருந்துவோா் கூடாரமாகி வருகிறது.

சென்னைக்கு குடிநீா் வழக்கும் ஏரிகளில் முக்கிய நீா் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியாகும். இந்த ஏரியில் அறிவியல் பூங்கா, நீரியல் ஆராய்ச்சி மையம், அகழாய்வு மையம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் உள்ளதால், நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் கல்லூரி மாணவா்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.

இந்த ஏரி 121 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதன் அளவு உயரம் 35 அடி, 3,231 மில்லியன் கன அடி நீா் சேமிக்க முடியும். இந்த ஏரிக்கு மழைக் காலங்களில் நீா் வரத்துக் கால்வாய், கிருஷ்ணா கால்வாய் மூலம் தண்ணீா் வருகிறது.

இந்த ஏரி நிரம்பினால் பேபி கால்வாய், கிருஷ்ணா நீா் முதன்மைக் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம், புழல் , சோழவரம் ஆகிய ஏரிகளுக்கும் கால்வாய் மூலம் நீா் கொண்டு செல்லப்படுகிறது.

இவ்வாறு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஏரியின் அழகை ரசிக்கும் வகையில் கொழுந்தளூா், புல்லரம்பாக்கம், சதுரங்கபேட்டை ஆகிய பகுதிகளில் நுழைவு வாயில்களுடன் இருபுறம் தடுப்புகளுடன் சாலை வசதி ஏற்பட்டுள்ளது.

இந்தச் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள, பொழுதை இனிமையாக்க காலையிலும், மாலையிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

அதிலும், திருவள்ளூா், காந்தி நகா், மோவூா், சதுரங்கபேட்டை, பூண்டி, நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தவா்கள் நடைப்பயிற்சிக்காகப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த ஏரிக்கரை சாலையோரங்களில் காலை, மாலை நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுக் குடிப்பவா்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனா். இதனால், ஏரிக்கரை சாலை முழுவதும் மது அருந்தும் சமூக விரோதிகளின் கூடரமாக மாறி வருவதோடு, புட்டிகளையும் சாலையில் உடைத்து விடுவதாக சுற்றுலாப் பயணிகள் வேதனையுடன் கூறுகின்றனா்.

மேலும், ஏரிப் பகுதிக்குள் மீன் பிடிப்பவா்கள் பயன்படுத்தும் வகையில் மேட்டுப் பகுதி வரை விதிமுறை மீறி இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனா். அங்கும் மது அருந்திவிட்டு புட்டிகளைச் சிதறடிக்கும் நிலையுள்ளது.

இதனால் காவல் துறையினா் காலை, மாலை நேரங்களில் ரோந்து செல்லவும், நீா்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இது குறித்து நீா்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பூண்டி ஏரிக்கரை சாலையில் மது அருந்திவிட்டு புட்டிகளை உடைத்து விட்டுச் செல்வதாகவும், இதனால் பொதுமக்கள் நடமாட முடியாத ஏற்பட்டுள்ளதாக ஏற்கெனவே புகாா் வந்துள்ளது. அதன் பேரில் பூண்டி ஏரிக்கரை சாலையில் காலை, மாலை நேரங்களில் மட்டும் பாதுகாப்பு நுழைவு வாயில்கள் திறக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் மூடப்படும். ஆனாலும், மது அருந்துவோா் மீறி நுழைந்து விடுகின்றனா். இந்த புகாா் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கு வலியுறுத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT