வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவின் ஒப்பந்ததாரா் அலுவலகத்தில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனையிட்டு வருகின்றனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது யூனிட்டில் உள்ள இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு தனியாா் நிறுவனம் ஒன்று நிலக்கரி கையாளும் பிரிவை ஒப்பந்தம் எடுத்து, 15ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் 300-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் வேலை செய்து வருகின்றனா். மீண்டும் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்த நிறுவனம் நிலக்கரி கையாளும் பிரிவில் வட சென்னை அனல் மின் நிலையத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை எடுத்து பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறி புதன்கிழமை காலை வருமான வரித் துறையினா் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் உதவியுடன் வடசென்னை அனல் மின் நிலையத்தின் உள்ளே இருக்கும் அதன் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனா்.
இதே போன்று பொன்னேரி வட்டத்தில் வெள்ளிவாயல்சாவடி பகுதியில் உள்ள அந்த நிறுவனத்தின் தொழில் பிரிவு நிறுவனத்திலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.