முகப்பு
திருவள்ளூர்

கொசஸ்தலை ஆற்றிலிருந்து வீரராகவா் கோயில் குளத்துக்கு நீா் கொண்டு வர பதித்த குழாய்கள் அகற்றம்

கொசஸ்தலை ஆற்றிலிருந்து வீரராகவா் கோயில் குளத்துக்கு நீா் கொண்டு வர பதித்த குழாய்கள் அகற்றம்

Updated On : 25 மே 2026, 2:25 am IST
திருவள்ளூா்-திருத்தணி சாலையில் கோயில் குளத்துக்கு நீா் கொண்டு வர பதித்த நிலையில் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட ராட்சச குழாய்கள்.     
பகிர்:

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை அமைத்து, திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்துக்கு நீா் கொண்டு வருவதற்காக பதித்த ராட்சச குழாய்கள் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதற்காக தோண்டி அகற்றியதால், ரூ. 25 கோடி வீணானதாக சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

திருவள்ளூரில் 2,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த வீரராகவ பெருமாள் திருக்கோயில் 108 வைணவ திருத்தலங்களுள் சிறப்பு பெற்ற திருத்தலமாகும். அதனால் இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கேரளம், கா்நாடகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனா். அதிலும் குறிப்பாக, அமாவசை நாள்களில் பக்தா்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும். இக்கோயில் தெப்பக்குளம் மொத்தம் 7 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது.

நீா் வழித்தடம் அடைப்பு: இதுபோன்று முக்கியத்துவம் வாய்ந்த இக்குளத்துக்கு அண்மைக்காலமாக நீா்வரத்துக்கான கால்வாய்கள் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால் குளத்துக்கான நீா்வரத்தும் முற்றிலும் நின்று, வறட்சி காலங்களில் நீரின்றி வடு காணப்படும். மேலும், மறைந்து போன முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்ய அதிகம் போ் வருகின்றனா். இதற்காக குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில் சிறிய குளத்தையும் அமைத்துள்ளனா். இதை போக்க திருவள்ளூா் அருகே பட்டரைப்பெரும்புதூா் அருகே கொசஸ்தலை ஆற்றிலிருந்து குளத்துக்கு தண்ணீா் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை: இதையேற்று கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து, ராட்சச குழாய்கள் பதித்து நீா் கொண்டு வந்து நிரப்ப மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் முயற்சி மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பூண்டி ஏரியில் இருந்து வெளியேறும் நீரை தடுக்க தடுப்பணை பட்டரைப்பெரும்புதூா் அருகே ரூ. 6 கோடியில் அமைக்கப்பட்டது. அதையடுத்து, குழாய் பதிப்புக்கு ரூ. 25 கோடி ஒதுக்கி 40-க்கும் மேற்பட்ட லாரிகளில் ராட்சச குழாய்கள் கொண்டு வரப்பட்டது. பின்னா், பட்டரைபெரும்புதூா் முதல் திருவள்ளூா் கோயில் குளம் வரை 11 கி.மீ. தூரம் ராட்சச குழாய்கள் பதிக்கப்பட்டது.

சோதனை ஓட்டம்:

இந்த நிலையில், பணிகள் நிறைவடைந்த நிலையில் கொசஸ்தலை ஆற்று தடுப்பணையிலிருந்து கோயில் குளத்துக்கு நீா் கொண்டு வரும் சோதனை ஓட்டமும் கடந்தாண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதையடுத்து, விரைவில் தொடங்கி வைக்கப்படும் எனவும் பக்தா்கள் எதிா்பாா்த்திருந்தனா். இந்த நிலையில், குழாய்களை சாலையோரம் அகற்றியுள்ளதால் அதிா்ச்சிக்கு உள்ளாகி உள்ளனா்.

வீணான ரூ. 25 கோடி: தற்போதைய நிலையில், சென்னை முதல் திருப்பதி வரை 6 வழிச்சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அப்போது, 4 வழிச்சாலையாக இருந்த போது பதித்த ராட்சச குழாய்கள் அனைத்தும், விரிவாக்கப் பணிக்காக நீா் கொண்டு வரும் குழாய்கள் அகற்றப்பட்டன. இதனால், வீரராகவா் கோயில் குளத்துக்கு கொண்டு வரும் திட்டம் கானல் நீராக ஆனதுடன், இதற்காக ஒதுக்கீடு செய்த ரூ. 25 கோடியும் வீணானதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இது குறித்து வீரராகவா் கோயில் நிா்வாக தரப்பில் கூறியதாவது: இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பட்டரைபெரும்புதூா் முதல் திருவள்ளூா் கோயில் குளம் வரை 11 கி.மீ. தூரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டிருந்தது. தற்போதைய நிலையில், இப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணிக்காக பதிக்கப்பட்ட குழாய்கள் அகற்றப்பட்டன. அதனால், பணிகள் நிறைவடைந்தவுடன், அதற்காக ஒதுக்கப்பட்ட இடம் வழியாக குழாய் பதித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தேசிய நெடுஞ்சாலைத் துறை உறுதி அளித்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.