திருப்பதி கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் விசேஷ பூஜை ஹோம மஹோற்சவம் புதன்கிழமை தொடங்கியது.
தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு (தெலுங்கு நாள்காட்டிபடி ) விசேஷ பூஜை ஹோம மஹோற்சவம் புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
காா்த்திகை மாதத்தை முன்னிட்டு கோயிலில் உள்ள அனைத்து மூா்த்திகளுக்கும் ஒரு மாதம் ஹோம மஹோற்சவம் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, பால், தயிா், தேன், சந்தனம், விபூதி ஆகியவற்றால் பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் மண்டபத்தில் கணபதி உருவத்தை ஏற்படுத்தி அங்கு ஹோம பூஜை விமரிசையாக தொடங்கியது.
மாலையில் கணபதி பூஜை, புண்யாஹவச்சனம், வாஸ்துபூஜை, பா்யாக்னிகரணம், மிருதசங்கிரஹணம், அங்குராா்ப்பணம், கலசஸ்தாபனம், அக்னிபிரதிஷ்டை, கணபதி ஹோமம், லகுபூா்ணாஹுதி நடைபெற்றது. 3 நாள்கள் ஹோமம், அக். 24-ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.