சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளுக்கு தரவேண்டிய ரூ. 1.5 கோடியை 3 நாள்களில் பெற்றுத் தருவதாக தேசிய நதிகள் இணைப்பு - தென் இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வியாழக்கிழமை விவசாயிகளை சந்தித்தபோது தெரிவித்தார்.
சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளின் விளை பொருள்களான நெல், மணிலா உள்ளிட்ட தானியங்களைக் கொள்முதல் செய்வதில் மாவட்டத்தில் முதலிடத்திலும், மாநிலத்தில் 2-ஆவது இடத்திலும் இருந்து வந்தது. இங்கு விவசாயிகளின் விளை பொருள்களுக்கு நல்ல விலையும், உடனடியாகப் பணப் பட்டுவாடாவும் செய்யப்பட்டு வந்தது.
இதனால் திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் இங்கு விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால், பணப் பரிவர்த்தனையில் பாதிப்பு ஏற்பட்டது.
பணத்தை வங்கிகள் மூலமாக வழங்கிய நிலையில், இதனைப் பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள் கார்த்தி, அவரது தந்தை சீனு, சகோதரர் கண்ணன் ஆகியோர் ரூ. 1.5 கோடி பழைய ரூபாய் நோட்டுகளாக உள்ளன. எனவே, அதனை மாற்றித் தருகிறோம் என்று கூறி விவசாயிகளுக்கு பணப் பட்டுவாடா செய்யாமல் தாமதப்படுத்தினர். இவர்களுக்கு உடந்தையாக மார்க்கெட் கமிட்டி பணியாளர்களும் செயல்பட்டதால் விவசாயிகள் பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பணத்தைக் கேட்டு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. கே.வி.சேகரன் ஆகியோரை சந்தித்தும் முறையிட்டனர். இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்டதாக வியாபாரிகள் மற்றும் கமிட்டி கண்காணிப்பாளர் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தைப் பெற நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார். அதன்படி, மாவட்ட கமிட்டிகளின் செயலர் மாரியப்பன் 30 நாளில் பணத்தைப் பெற்றுத் தருவதாகவும், மார்க்கெட் கமிட்டி செயல்பட விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறினாராம். ஆனால் இது நாள் வரை விவசாயிகளுக்கு பணம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தேசிய நதிநீர் இணைப்பு - தென் இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வியாழக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம், நல்லடி சேனை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார். அவரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது குறைகளைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அய்யாக்கண்ணு சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியைப் பார்வையிட்டு கண்காணிப்பாளர் (பொறுப்பு) தாமோதரன், வியாபாரிகள் சங்கத் தலைவர் புருஷோத்தமன், செயலர் கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை மற்றும் விவசாயிகள் மார்க்கெட் கமிட்டி தொழிலாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, அய்யாக்கண்ணு விவசாயிகளிடம் பேசியதாவது: கடந்த 6 மாத காலமாக மார்க்கெட் கமிட்டி விவசாயிகளின் பணத்தைத் தராமல் மூடி கிடக்கிறது. விவசாயிகளின் வயிற்றில் அடிக்க வேண்டாம். அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தைக் கொடுப்பது அரசின் கடமை. விவசாயிகள் பணத்தையும் இழந்து கடும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், விவசாயிகள் வாங்கிய கடனைச் செலுத்துமாறு வங்கிகள் நோட்டீஸ் அனுப்புகின்றன. ஒரு பைசா செலவில்லாமல் உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை 3 நாள்களில் பெற்றுத் தருகிறேன். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து பேசுகிறேன். இல்லையென்றால் இதுகுறித்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.