கலசப்பாக்கத்தை அடுத்த சிங்காரவாடி கிராமத்தில் அமைந்துள்ள 1,500 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீசவுந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீசிவசங்கரநாதர் கோயிலில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
பல ஆண்டுகளாக சிதிலமடைந்திருந்த இந்தக் கோயிலை பக்தர்கள், ஊர் பொதுமக்கள் சேர்ந்து பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்தனர். இந்நிலையில், இந்தக் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அனுக்ஞை, மகா கணபதி பூஜை, கோ பூஜை, தன பூஜை, கணபதி, நவக்கிரகப் பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன. பகல் 12 மணிக்கு புதிய பிம்பங்களுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்சா பந்தனம், அங்குரார்ப்பனம், ஆச்சார்யவர்ணம், கலகாஷனம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலைப் பூஜை, விசேஷ திரவிய பூர்த்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கும்பாபிஷேகம் கோலாகலம்: தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை 6 மணிக்கு 2-ஆம்கால யாகசாலைப் பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, யாத்ராதானம், மகா பூர்ணாஹுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 9.45 மணிக்கு மூலவர் சன்னதி, கோயில் கோபுரங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு சிறப்பு அன்ன தானம், சுவாமி திருக்கல்யாண உத்ஸவம், மாலை 6 மணிக்கு சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை சிங்காரவாடி கிராம இளைஞர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.