திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் தடையை மீறி மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 2,350 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை உள்ளடக்கிய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8-ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்: இந்நிலையில், வியாழக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.
அதன்படி, திருவண்ணாமலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே திரண்டனர்.
பின்னர், தங்களது கோரிக்கைகளை முழங்கியபடியே பெரியார் சிலை வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர், தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் கீழ்பென்னாத்தூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் சி.அ.முருகன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலர் செல்வி முன்னிலை வகித்தார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 220 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வந்தவாசி: வந்தவாசியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வியாழக்கிழமை காலை வட்டாட்சியர் அலுவலகம் முன் கூடினர். பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் கோட்டை மூலை அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ - ஜியோ அமைப்பில் உள்ள பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் ஆர்.மோகன், ஜி.பிரபு, ஜெயராமன், க.ஜோதிபாபு, தியாகராஜன், சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்டதாக 127 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 230 பேரை வந்தவாசி தெற்கு போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஆரணி: ஆரணியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று ஆரணி நகர காவல் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அசோகன், தர்மலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 67 ஆண்கள், 65 பெண்கள் உள்பட 132 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டில் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், கலந்து கொண்ட 310 பேரை போலீஸார் கைது செய்தனர்.
செய்யாறு: செய்யாறில் ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்யாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகேயும், வெம்பாக்கம் பகுதியிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் குணசேகரன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி, சாரதி ஆகியோர் தலைமையிலான போலீஸார், செய்யாறில் போராட்டத்தில் ஈடுபட்ட 122 பெண்கள் உள்பட 305 பேரை கைது செய்தனர். இதே போன்று வெம்பாக்கம் பகுதியில் 160 பெண்கள் உள்பட 230 பேர் என மொத்தம் 539 பேரை போலீஸார் கைது செய்தனர்.
11 இடங்களில்...: இதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், செங்கம், கலசப்பாக்கம் உள்பட மொத்தம் 11 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட சுமார் 2,350 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.